Published : 30 Apr 2022 05:38 AM
Last Updated : 30 Apr 2022 05:38 AM
சென்னை: முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
எல்.முருகன் தற்போது மத்தியஇணை அமைச்சராக பதவி வகிப்பதால் இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மே 2-ம் தேதி எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யவும் கோரி எல்.முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று நடந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து, மே 2-ம் தேதி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எல்.முருகன் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT