Published : 28 Apr 2022 04:36 PM
Last Updated : 28 Apr 2022 04:36 PM

மதுரை மேயரை பார்க்க முடியவில்லை: மனு கொடுக்க வந்த பாஜகவினர் அதிருப்தி

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: "மதுரை மாநகராட்சி மேயரை நேரில் சந்தித்து சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மனு அளிக்க வந்தோம், அவரை பார்க்க முடியாததால் ஆணையாளரிடம் மனு கொடுத்து இருக்கிறோம்" என மதுரை பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற டாக்டர் சரவணன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காததால் பாஜகவில் திடீரென்று சேர்ந்தார். அவர் அக்கட்சியில் சேர்ந்தவுடனேயே மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். பாஜக தலைமை அவரை மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவராக நியமித்தது. பாஜக மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் அவர் போராட்டங்கள் நடத்துவது, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பது, ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரை பார்ப்பதுமாக மதுரையில் திமுகவுக்கு எதிராக பரபரப்பாக அரசியல் செய்து வருகிறார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் குரல் கொடுத்தார். இன்று அவர் திடீரென்று கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டார். அலுவலகத்தில் அவர் வந்த நேரத்தில் மேயர், ஆணையாளர் இல்லாததால் டாக்டர் சரவணன், அவருடன் வந்த பாஜகவினர் அதிருப்தியடைந்தனர். பாஜகவினர் வந்த தகவலை மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளியே சென்றிருந்த ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் உடனடியாக அலுவலகத்திற்கு வந்தார்.

அவரிடம் டாக்டர் சரவணன் தலைமையில் பாஜகவினர், மதுரை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட 25 சதவீதம் 150 சதவீதம் வரைஉள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும், அதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறியது: "சொத்து வரி தொடர்பாக மனு அளிக்க மேயரை சந்திக்க வந்தேன். அவரை பார்க்க முடியவில்லை. மாநகராட்சி ஆணையாளரை பார்த்து சொத்து வரி உயர்வை ரத்து செய்ய மனு வழங்கினோம். அவருடைய பதிலில் எங்களுக்கு திருப்தியில்லை. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் திமுகவை சேர்ந்தவர் மேயராக இருந்த காலத்தில் மதுரை மாநகராட்சியில் மற்ற மாநகராட்சிகளை விட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது.

அந்த வரி 85 சதவீதம் முதல் 455 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒரு சதவீதம் முதல் 10 சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்பட்டது. அப்போது மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தது. அதனுடன் 28 வார்டுகள் சேர்த்து வரி உயர்த்தப்பட்டது.

புதிதாக சேர்க்கப்பட்ட 28 வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டு வரி உயர்த்த வலியுறுத்தினோம். ஆனால், அந்த வசதிகள் தற்போது வரை செய்யப்படவில்லை. தற்போது அதற்குள் மீண்டும் அதே திமுக ஆட்சியில் மீண்டும் சொத்து வரி மதுரை மாநகராட்சியில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், மதுரைக்கு இந்த வரி உயர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். பொத்தம் பொதுவாக மத்திய அரசை காரணம் சொல்லி வரி உயர்த்தினால் மட்டுமே அம்ரூத் திட்டத்தில் நிதி கிடைக்கும் என்று தவறான தகவலை தெரிவிக்கின்றனர்" என்று சரவணன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x