Published : 26 Apr 2022 07:00 AM
Last Updated : 26 Apr 2022 07:00 AM
உதகை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
உதகை ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டில் 1050 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில்400 தனியார் பல்கலைக்கழகங்களாகும். 43 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கிராமப்புறங்களிலுள்ள 45 சதவீத கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் தர உயர்கல்வி கிடைக்க வேண்டும். அதன்மூலமாக, மாணவர்களின் வாழ்வு மாற்றமடைய வேண்டும்.
நூறாண்டுக்கு முன்னர் இருந்த கல்வி நிலை, தற்போது மாறியுள்ளது. தொழில்நுட்பப் புரட்சியால் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் மாற்றம் ஏற்படும். அதற்குநாம் தயாராக வேண்டும். சவால்களை எதிர்கொள்ள கல்விஅமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்களும் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வியை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்க அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.
ஒரு பட்டப்படிப்பு மட்டுமின்றி இரண்டு அல்லது அதற்கு மேல்பட்டப் படிப்புகளை ஆன்லைன்மற்றும் டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்ற, புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த, பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT