Published : 25 Apr 2022 06:20 AM
Last Updated : 25 Apr 2022 06:20 AM
சேலம்: சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. சேலத்தில் 41.4 மிமீ மழை பதிவானது. எடப்பாடி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு அப்பகுதியில் உள்ள வயல்களில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சூரமங்கலம், கோரிமேடு உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் இருசக்கர வாகனம், கார்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். கிச்சிப் பாளையம் நாராயண நகரில் சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழையால் சேலத்தில் பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை எடப்பாடி, பூலாம்பட்டி, குப்பனூர், சித்தூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், அங்குள்ள தோப்புகளில் வாழை மரங்கள் நூற்றுக்கணக்கில் முறிந்து சாய்ந்தன. இதுதொடர்பாக வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சேதமான வாழைகளால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்து வயல்களில் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 41.4, சங்ககிரி 11, தம்மம்பட்டி 10, ஆத்தூர் 6.8, எடப்பாடி 3.4, ஏற்காடு 1.8 மிமீ மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT