Published : 16 Apr 2022 07:43 AM
Last Updated : 16 Apr 2022 07:43 AM
கோவை: நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்டப் போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவவழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு மண்டலபோலீஸ் ஐஜி சுதாகர், கோவைசரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரும் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன் ஆகியோரிடம் சில மாதங்களுக்கு முன்னர்கோவையில் வைத்து போலீஸாரால் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ள தீபு, சதீசன்,ஜம்சீர் அலி, பிஜின், ஜிஜின் ராய் ஆகியோரிடமும் கடந்த ஜனவரியில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏஆறுக்குட்டியிடம் நேற்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் வைத்து, ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில், காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 6 மணி நேரம் விசாரணை நடந்தது.
இதுதொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறும்போது,‘‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது’’ என்றார்.
போலீஸார் தரப்பில் கூறுகையில், ‘‘கோடநாடு வழக்கில் முதல் குற்றவாளி கனகராஜ். இவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ், அவரதுமறைவுக்கு பிறகு, ஆறுக்குட்டியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிஉள்ளார். எனவே, கனகராஜ் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது’’ என்றனர்.
விசாரணைக்கு ஒத்துழைப்பேன்
முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி கூறும்போது, ‘‘இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜ் என்னிடம் ஒன்றரை வருடங்கள் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். அதனால் அவர் தொடர்பாக என்னிடம் போலீஸார் விசாரித்தனர். நான் எனக்குதெரிந்த விவரங்களை தெரிவித்துள்ளேன். போலீஸாரின் விசாரணை நேர்மையாக நடக்கிறது. போலீஸார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் ஒத்துழைப்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT