Published : 14 Apr 2022 09:09 AM
Last Updated : 14 Apr 2022 09:09 AM
நாகர்கோவில்: அரசு பள்ளியில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறி, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்றதாக எழுந்த புகாரில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீப காலமாக மாணவ, மாணவிகளிடம் வகுப்பு நேரத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது.
அந்தப் பள்ளியில் தையல் ஆசிரியையான பியாட்றிஸ் தங்கம், கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக, 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர், இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் மதமாற்ற முயற்சி நடப்பதை மாணவி புகாராக கூறினார்.
இந்த வீடியோ கடந்த 2 தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி நேற்று முன்தினம் மாலை இந்து முன்னணியினர் மற்றும் பெற்றோர்கள் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். கண்ணாட்டுவிளை அரசு பள்ளி நிர்வாகம் மற்றும் புகாருக்குள்ளான தையல் ஆசிரியை பியாட்றிஸ் தங்கத்திடம் விசாரணை நடத்தி, துறைவாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று உத்தரவிட்டார். தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் தலைமையிலான குழுவினர், கண்ணாட்டுவிளை அரசு பள்ளிக்கு சென்று மாணவி மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இச்சம்பவம் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, மாணவிகளிடம் மதமாற்ற முயற்சி மேற்கொண்ட ஆசிரியை பியாட்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT