Published : 08 Apr 2022 06:45 AM
Last Updated : 08 Apr 2022 06:45 AM
தாம்பரம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் ‘பாய்ன்ட் ஆப் சேல்’ இயந்திரத்தை 2ஜி அலைவரிசையில் இருந்து 4ஜி அலைவரிசையில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், 34 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் விநியோகிக்கப்படுகின்றன.
இதனிடையே உணவுப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க, தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை, விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளது. அதனால், `பயோமெட்ரிக்' பதிவு இல்லாமல் யாருக்கும் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதில் வயதானவர்கள், நோயாளிகளுக்கு விதிவிலக்கு அளித்து, வட்டாட்சியரிடம் சான்று பெற்று வந்தால் குறிப்பிடும் நபர்களுக்கு விதிவிலக்கு அளித்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பொருட்கள் விநியோகம் செய்யப்படும்போது, பல ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
`பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 2ஜி இணைப்புக்கான அலைவரிசை வசதி மட்டுமே இருப்பதால், 4ஜி வசதியை கருவி ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், ஸ்கேன் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையைத் தவிர்க்க, ரேஷன் கடைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட `பாயின்ட் ஆப் சேல்' கருவியை மாற்றி, புதியதாக 4ஜி அலைவரிசை வசதியுள்ள இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைதொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விரைவில் 5ஜி அலைவரிசையை நோக்கி உலகம் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், ரேஷன் கடைகளில் இன்னும் 2ஜி வசதியுள்ள கருவிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இதனால்தான் காலதாமதம் ஏற்படுகிறது. இதை 4ஜி அலைவரிசைக்கு மாற்றினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இது தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT