Published : 04 Apr 2022 09:05 AM
Last Updated : 04 Apr 2022 09:05 AM
சென்னை: சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 450 குடும்பங்களை மறுகுடியமர்த்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டன.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து, கூவம் ஆற்றின் கரையோரம் 44 அமைவிடங்களில் வசித்து வந்த 14,257 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அப்பணி சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 12,450 குடும்பங்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், நாவலூர், திருவொற்றியூர் ஆகிய புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே கூவம் ஆற்றின் கரையோரம் அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வந்த 243 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வியாண்டு முடிந்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 450 குடும்பங்களை புளியந்தோப்பு கே.பி.பூங்கா திட்டப் பகுதியில் உள்ள வாரிய வீடுகளுக்கு மறுகுடியமர்வு செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை கூட்டாக மேற்கொண்டுள்ளன. இப்பணி அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்குடும்பங்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றில் முகவரி மாற்றம் செய்வதற்கான முகாம்களும் நடத்தப்பட்டன. அங்குள்ள பள்ளி மாணவர்கள் விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT