Published : 21 Mar 2022 08:22 AM
Last Updated : 21 Mar 2022 08:22 AM

மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 14 பேர் பிடிபட்டனர்

சென்னை: மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 14 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களது இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, மெரினா காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இந்த ரேஸை சிலர் சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிர்ந்தனர். இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 14 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ரேஸுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 3 பேர் பிடிபட்டனர்

மெரினா சர்வீஸ் சாலையில், நேற்று காலை 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர். அப்போது, அவ்வழியாக சைக்கிளில் சென்ற பெண்ணை உரசிச் சென்றனர். இதில், அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து, நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், அந்த 3 இளைஞர்களையும் மடக்கி பிடித்து மெரினா போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள், திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு பகுதியை சேர்ந்த பால கிருஷ்ணன் (19), யுவராஜ் (19), கோகுல்ராஜ் (18) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் 3 பேரையும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் மெரினா போலீஸார் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x