Published : 05 Mar 2022 08:17 AM
Last Updated : 05 Mar 2022 08:17 AM

ஒடிசா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவர மின் வாரியம் முடிவு

சென்னை:ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவர மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 5,700 மெகாவாட் திறன்கொண்ட 5 அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.

இங்கு மின் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலக்கரிக்காக, ஒடிசா மாநிலம் ஆங்கூல் மாவட்டத்தில் 90 கோடி டன் இருப்புடைய சந்திரபிலா சுரங்கத்தை கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கியது.

இந்த சுரங்கத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு ஒரு கோடி டன் என 35 ஆண்டுகளுக்கு நிலக்கரி விநியோகம் செய்யும் பணிக்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக கடந்த 2019-ல் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் 2020-ல் புதிய டெண்டர் கோரப்பட்டது. இதில் ஒரு நிறுவனம்கூட பங்கேற்காததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

மழை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி முழுமையாக அனுப்பப்படுவது இல்லை. இதனால், அனல் மின் நிலையங்களின் நிலக்கரித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.

சர்வதேச சந்தைகளில் விலை அதிகமாக உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில், சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க தமிழக மின் வாரியம் தீர்மானித்துள்ளது.

சந்திரபிலா சுரங்கம் அமைந்துள்ள நிலங்களில் 3-ல் ஒரு பங்கு இடம் மத்திய வனத் துறை வசம் உள்ளது. அங்கு நிலக்கரி எடுக்கும் பணிக்கான அனுமதியை வனத் துறையிடமிருந்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, முதல்கட்டமாக வனப் பகுதியைத் தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x