Published : 03 Mar 2022 05:08 AM
Last Updated : 03 Mar 2022 05:08 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 12 நகராட்சி, 17 பேரூராட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி அலுவலகங்களில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நகராட்சியின் 21 வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் ராமஜெயம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திருவள்ளூர் நகராட்சியில் 27 பேர் பதவியேற்றனர். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர் மீரான் ஒலி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் ரமேஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பூந்தமல்லி நகராட்சியின் 21 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் நாராயணன் முன்னிலையில் பொறுப்பேற்றனர். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகளில், பதவி ஏற்றுக்கொண்டவர்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்தினர். அதேபோல், புதிதாக நகராட்சியாக மாற்றப்பட்ட திருநின்றவூரில் 27 பேருக்கு நகராட்சி ஆணையர் கணேஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்னேரி நகராட்சியின் நகராட்சி ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் 27 பேர் பதவியேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 நகர மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நகராட்சி ஆணையர் தாமோதரன் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாங்காடு நகராட்சியில் நகராட்சி ஆணையர் சுதா தலைமையில் 27 நகர மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் அருள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மறைமலை நகர் நகராட்சியில் 21 வார்டுகளில் உறுப்பினர்களுக்கு ஆணையர் லட்சுமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக பதவியேற்க வந்த கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஆணையர் இளம்பருதி தலைமையில் 29 நகர மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். செங்கல்பட்டு நகராட்சியில் ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் 33 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பேரூராட்சிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் 48 பேர் பதவியேற்றுக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, நாரிவாரிக்குப்பம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 2 வார்டு உறுப்பினர்கள் தவிர, 127 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி, அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய 6 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 99 உறுப்பினர்களில் இடைக்கழிநாடு பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தவிர மற்றவர்கள் பதவியேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT