Published : 26 Feb 2022 07:45 AM
Last Updated : 26 Feb 2022 07:45 AM

காங். எதிர்பார்க்கும் மேயர், துணை மேயர் பதவிகள்: பட்டியலை விரைவில் முதல்வரிடம் வழங்க முடிவு

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள் கேட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் விரைவில் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளின் 73 வார்டுகள் உட்பட மொத்தம் 592 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகளில் போட்டியிட்டு, 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நகராட்சிகளில் 151 இடங்கள், பேரூராட்சிகளில் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ளது. இதில், சில பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி, சென்னை உட்பட 2 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகள், 15-க்கும்மேற்பட்ட இடங்களில் நகராட்சி தலைவர்கள் பதவிகளை காங்கிரஸ்கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பட்டியலை தயாரித்துள்ள காங்கிரஸ், விரைவில் முதல்வரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை வந்துள்ள நகர்ப்புற தேர்தல் மேலிடபார்வையாளர் ரமேஷ் சென்னிதலா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மூத்ததலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரமேஷ் சென்னிதலா கூறியபோது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. ராகுல் காந்தி வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் கலந்துரையாடுகிறார். எனவே, அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்துஆலோசித்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருங்காலத்திலும் இக்கூட்டணி தொடரும்’’ என்றார்.

சென்னைக்கு ராகுல் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி பற்றி விமர்சிக்க தேவை இல்லை. அதுஎழுதி வைக்கப்பட்ட ஒன்று. முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறார். வெற்றி பெற்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார். உக்ரைனில் தவிக்கும் இந்திய மக்களை காப்பாற்றி மீட்டுவர நம்மிடம் சொந்த விமானம்கூட இல்லைஎன்பது, நாட்டை ஆள்வதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை என்பதை காட்டுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x