Published : 23 Feb 2022 07:40 AM
Last Updated : 23 Feb 2022 07:40 AM

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிப்பு: அதிமுகவுக்கு பெரும் தோல்வி

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில், மொத்தமுள்ள 1,374 மாநகராட்சி வார்டுகளில் 161, மூன்று ஆயிரத்து 843 நகராட்சிகள் வார்டுகளில் 638, ஏழு ஆயிரத்து 621 பேரூராட்சி வார்டுகளில் 1,206 வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது. ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக்கூட அதிமுகவால் கைப்பற்ற முடியாமல் பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் மட்டுமே வென்றறன. அதே ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 214 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும், 1,792 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களையும் அதிமுக பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அதிமுகவைவிட கூடுதல் வாக்குகளைப் பெற்று, 244 மாவட்ட உறுப்பினர்களையும், 2,095 ஒன்றிய உறுப்பினர்களையும் பெற்றது.

முன்னதாக, 2011-ல் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகள், 89 நகராட்சிகள், 285 பேரூராட்சிகள், 566 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,727 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் இந்த சரிவுக்கு சசிகலாவிவகாரம், ஒற்றைத் தலைமை கோரிக்கை, கோஷ்டி பூசல் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்பட்டன. ஆனால், இதை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை அதிமுக தலைமை மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தியில் நிர்வாகிகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக,பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் சந்தித்த அதிமுக, 66 தொகுதிகளில் மட்டுமே வென்று, ஆட்சியை இழந்தது.

புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை 2021-ல் நடத்தியது. அப்போது, வெறும் 2 மாவட்ட ஊராட்சி வார்டுகளை மட்டுமே அதிமுக பெற்றது. திமுக 139 உறுப்பினர்களை அள்ளியது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் திமுக அரசு ஊழல் செய்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் அதிமுக பிரச்சாரம் செய்தது.

ஆனால், இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் தொடர் பின்னடைவு தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் நிலைமையைச் சரிசெய்ய தீவிர நடவடிக்கைகள் வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

2019-ல் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் கணிசமான தலைவர் பதவிகளை கைப்பற்றி இருக்கலாம் என்றும் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக, 4 தொகுதிகளில் வென்றது. வார்டுஒதுக்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து விலகி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 22, நகராட்சிகளில் 56, பேரூராட்சிகளில் 230 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சிகளில் சுமார் 1.60 சதவீதம்வாக்குகளுடன் 5-வது இடத்தையும், நகராட்சிகளில் 1.50 சதவீதம் வாக்குகளுடன் 4-வது இடத்தையும், பேரூராட்சிகளில் 3 சதவீத வாக்குகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

‘தமிழகத்தில் இனி பாஜக காலம்’

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாஜக மீதுநம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வரும் காலம் பாஜக காலமாக இருக்கும்.

அதிமுகவுடனான தேசியக் கூட்டணி தொடரும். அதிமுக பெரிய கட்சி. ஏதோ ஒரு தேர்தலில் பின்தங்கியதால், தப்புக் கணக்கு போடமுடியாது. தமிழகத்தில் பாஜக வலிமையான கட்சியாகியுள்ளது.

கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுக, பாஜக கூட்டணிக்கானதுதான். திமுக வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான இடங்களில் பெற்றுள்ள வாக்குகளையும், அதிமுக, பாஜக பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மைபுரியும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், கடலூர், வேலூர், திருப்பூர், மதுரை பகுதிகளிலும், சென்னையிலும் பாஜகவினர் புதிதாக வார்டு உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர்" என்றார்.

அதிமுகவின் சரிவுக்கு சசிகலா விவகாரம், ஒற்றைத் தலைமை கோரிக்கை, கோஷ்டி பூசல் காரணங்களாக கூறப்பட்டன. இதை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை அதிமுக தலைமை மேற்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x