Published : 19 Feb 2022 06:18 AM
Last Updated : 19 Feb 2022 06:18 AM
சென்னை: தமிழகத்தில் ஏமாற்றங்களை மாற்றத்தான் பாஜக தயாராகி வருகிறது. எனவே, அனைவரும் நம்பிக்கையோடு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொய் வாக்குறுதி அளித்தே, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல், மக்களை கவரும் கவர்ச்சி திட்டங்களை மட்டுமே வழங்கி வருவதால், தமிழகம் சுமார் ரூ.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. கல்வித் துறையில் செலுத்த வேண்டிய கவனத்தை டாஸ்மாக் மீது செலுத்துகின்றனர். கல்வியை சிறந்த வியாபாரமாக மாற்றிய பெருமை திமுகவையே சாரும்.
ரவுடிகள் சுதந்திரமாக உலா வரும் ஆட்சியாக திமுகவின் ஆட்சிதிகழ்கிறது. திமுக ஆட்சியில் மதவாதம் தலைவிரித்தாடுகிறது. அனைத்து சாதி, மத மக்களையும்,சமமாக மதிக்காமல், இந்து மக்களின் நம்பிக்கைகள், கலாச்சாரத்தை சீரழிப்பதை வழக்கமாககொண்டுள்ளனர். ஊழலின் ஊற்றுக் கண்களாக தொடர்ந்து திமுக திகழ்கிறது. மதச்சார்பு, மதவெறுப்புடன் நடந்து கொள்கிறது.
திமுக ஆட்சியை எந்த வகையில் பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதை மாற்றத்தான் பாஜகதயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் உடனான கூட்டணியை மட்டுமே நம்பி பாஜக வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இதுவரை ஏமாற்றம். இனிமேல் மாற்றம் என்பதை மனதில் ஏந்தி நம்பிக்கையோடு பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT