Last Updated : 15 Feb, 2022 05:03 PM

 

Published : 15 Feb 2022 05:03 PM
Last Updated : 15 Feb 2022 05:03 PM

"ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம்" - பொங்கல் பரிசை விமர்சித்து பழனிசாமி பேச்சு

தஞ்சாவூர்: "அழகான பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம்" என முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தஞ்சாவூர் ரயிலடியில் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிற்பகல் அவர் பேசியது: ”தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக. ஆனால், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக திமுக கூறியது. திமுக சொன்னபடி கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. மக்களின் நிலை, பொருளாதார நிலை உயர அடித்தளமிட்ட கட்சி அதிமுக. இந்தப் பொன் விளையும் பூமியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகளை வாழ வைத்த அரசு ஜெயலலிதாவின் ஆட்சி.

தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த 9 மாதங்களில் நாட்டு மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. சமையல் எரிவாயுக்கு ரூ.100 தருவதாகக் கூறினார். அதற்கு பதிலாக சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்ந்துவிட்டது. நகைக்கடன் தள்ளுபடி 35 லட்சம் பேருக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுக் குறைத்தாலும், திமுக அரசுக் குறைக்கவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் கிடக்கிறது. இதனால் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் திறந்தவெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து மீண்டும் முளைக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகை அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கப்பட்டபோது, ரூ.5,000 வழங்க வேண்டும் எனக் கூறியவர் ஸ்டாலின். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசுத் தொகையே கொடுக்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.410 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்துள்ளது. தரமற்ற பொருட்கள் நிறைந்த அழகான பொங்கல் பரிசு வழங்கிய ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது உள்ளாட்சி அமைப்பு. இதில், அதிமுக வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x