Published : 15 Feb 2022 09:39 AM
Last Updated : 15 Feb 2022 09:39 AM

எழுத்தாளர் பா.விசாலம் புதுச்சேரியில் காலமானார்

புதுச்சேரி: எழுத்தாளர் பா.விசாலம் (89) புதுச்சேரியில் நேற்று காலமானார். குமரி மாவட்டத்தில் பிறந்து புதுச்சேரியில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் பா.விசாலம் நேற்று காலமானார். கணவர் ராஜுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வந்த இவர், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், வி.பி.சிந்தன், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரோடு பணியாற்றியுள்ளார். புதுச்சேரியின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான வ.சுப்பையா, சரஸ்வதி சுப்பையா ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர்.

மாதர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்ட பா.விசாலம், 1960-களில் எழுத்தாளர் சுந்தரராமசாமியின் வழிகாட்டுதலின்பேரில் ‘சரஸ்வதி’ பத்திரிகையில் சிறுகதை எழுதினார். 1990-களில்அவரது சுய வரலாற்று நாவலான ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்’ என்ற நூலும், 2001-ல் ‘உண்மை ஒளிர்க என்று பாடுவோம்’ என்ற இவரது நாவலும் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவை.

இவரது கணவர் 2018-ல் காலமான பின்பு, புதுச்சேரி தாகூர் நகரில் தனது மகள் சித்ராவுடன் வசித்து வந்த விசாலம், உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதேச தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர்கள் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அக்கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் அஜிஸ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எழுத்தாளர் விசாலத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கருவடிக்குப்பம் இடுகாட்டில் நேற்று மாலை இறுதி சடங்குகள் நடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x