Published : 11 Feb 2022 03:00 PM
Last Updated : 11 Feb 2022 03:00 PM

சாதி, மதத்துடன் அல்ல சீருடையுடன் பள்ளிக்குள் செல்ல வேண்டும்: குஷ்பு 

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக வாக்குசேகரித்த நடிகை குஷ்பு

சென்னை: ’பள்ளிக்கூடத்துக்குள் செல்லும்போது, எந்த சாதியையும், எந்த மதத்தையும் உள்ளே கொண்டு போகாமல் பள்ளி விதிமுறைகளின்படி சீருடை அணிந்துதான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்’ என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொறுத்தவரை ஒரே விஷயம், மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது அங்கு சீருடையென்று ஒன்று உள்ளது. நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லலாம்; கேட் வரைக்கும் ஹிஜாப் அணிந்து செல்லுங்கள், அதன்பிறகு பள்ளிக்கூடத்துக்குள் செல்லும்போது, நாம் எந்த சாதியையும், எந்த மதத்தையும் உள்ளே கொண்டு செல்லாமல் இந்த நாட்டில் இருக்கிற குழந்தைகள் போல, பள்ளிக்கூடத்தின் விதிமுறைகளின்படி சீருடை அணிந்துதான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்.

என்னோட குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். நானும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவள். நான் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதே கிடையாது. மற்ற நண்பர்களும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தது கிடையாது. பள்ளிக்கூடத்தினுள் செல்லும்போது சீருடையில் தான் செல்வோம். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இதைவைத்து ஏன் பிரச்சினை செய்துகொண்டுள்ளனர். குழந்தைகள் மனதில் ஏன் சாதி, மதத்தைக் கொண்டு வருகிறீர்கள், இதைத்தான் நாங்கள் எதிர்க்கட்சிகளிடம் கேட்கிறோம்.

பெங்களூரில் சொன்னது என்ன, பள்ளிக்கூடத்துக்குள் வரும்போது ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்றுதான் சொல்கிறோம், பள்ளிக்கூடத்துக்கே வரவேண்டாம் என்று சொன்னோமா? காவித்துண்டு போட்டுக்கொண்டு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிஜாப் அணிந்துதான் நாங்கள் பள்ளிக்கு வருவோம் என்று அடம்பிடிக்கும்போதுதான், சில குழந்தைகள் காவித்துண்டு அணிந்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். இரண்டுமே தவறுதான்.

தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்படவில்லை, காலியான கம்பத்தில்தான் கொடியை ஏற்றியுள்ளனர். வீடியோவை நன்றாக பாருங்கள். அது தவறுதான், அதை சரியென்று யாருமே சொல்லவில்லை. பள்ளிக்கூடத்துக்கு ஹிஜாப் அணிந்து செல்வது தவறு என்றால், காவித்துண்டு, நீலத்துண்டு அணிந்து செல்வதும் தவறுதான்.

பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது யாராவது சீருடை இல்லாமல் உங்களது விருப்பப்படி உடை அணிந்து சென்றீர்களா? இந்து முஸ்லிம் பிரச்சினையாகத்தான் இது சென்று கொண்டுள்ளது, சீக்கியர்கள் தலைப்பாகை கட்டுவது பற்றிய பிரச்சினை இல்லை. தலைப்பாகை அணிபவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள். மதம் குறித்து பேசுகிறீர்களா, சாதி குறித்து பேசுகிறீர்களா? அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்து பாருங்கள் உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது, ஹிஜாபாக இருந்தாலும் சரி, காவித்துண்டு இருந்தாலும் சரி, எதுவுமே அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்குள் செல்லக்கூடாது.

அதைமீறித்தான் இவர்கள் ஒரு விதியைக் கொண்டு வருவார்களா? நான் படித்த பள்ளிக்கூடத்தில் என்றைக்குமே , நீங்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது, துண்டு அணிந்து வரக்கூடாது, அல்லது இதையெல்லாம் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்றெல்லாம் கூறியது கிடையாது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஏன் சீருடை கொடுக்கப்படுகிறது. சீருடை வித்தியாசம் ஏன் இருக்கிறது. அனைத்து பள்ளிகளுக்கும் ஏன் வேறு வேறு சீருடைகள் உள்ளன? அந்தந்த பள்ளியைத் தனியாக அடையாளம் காட்டத்தான் ஒரு சீருடை உள்ளது. அந்தப்பள்ளி எப்படிப்பட்ட பள்ளியென்று தெரிந்திருந்தும், குழந்தைகளை ஏன் அங்கு சேர்த்தீர்கள். பின்னர், திடீரென்று ஏன் இந்த பிடிவாதம். ஹிஜாப் அணிந்து வருவது தவறு என்றால், காவித்துண்டு அணிந்து வருவதும் தவறுதான்" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x