Published : 08 Feb 2022 08:15 AM
Last Updated : 08 Feb 2022 08:15 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 819 பேர் போட்டியிட உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர் வாகியுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டு மனுத்தாக்கல் 28-ம் தேதி தொடங்கியது. மனுத்தாக்கல் கடந்த 4-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிந்தது. பெறப் பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. மனுக்கள் திரும்பப்பெற நேற்று கடைசி நாள். மேலும், வேட்பாளர்களின் சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு 505 மனுக்கள் பெறப்பட்டது, குடியாத்தம் நகராட்சியில் 234, பேரணாம்பட்டில் 105, ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் 72, பள்ளிகொண்டா பேரூராட்சியில் 79, பென்னாத்தூர் பேரூராட்சியில் 89, திருவலம் பேரூராட்சியில் 63 என மொத்தம் 1,147 மனுக்கள் பெறப்பட்டன.
வேலூர் மாநகராட்சியில் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 115 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. இறுதி களத்தில் 354 வேட்பாளர்கள் உள்ளனர். இதில், மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட 7-வது வார்டில் திமுக வேட்பாளர் புஷ்ப லதா வன்னியராஜா மற்றும் 8-வது வார்டில் திமுக வேட்பாளர் சுனில்குமார் ஆகியோர் போட்டி யின்றி வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் 58 வார்டு களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.
வேலூர் மாநகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் நேரடி தேர்தலை சந்தித்தது. இரண்டாவது முறையாக தேர்தலை சந்திக்கும் வேலூர் மாநகராட்சியில் முதல் முறையாக திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி களத்தில் குடியாத்தம் நகராட்சியில் 165, பேரணாம்பட்டில் 97, பேரூராட்சிகளில் ஒடுக்கத்தூரில் 38 பேர், பள்ளிகொண்டாவில் 64 பேர், பென்னாத்தூரில் 52, திருவலத்தில் 49 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மொத்தம் 819 பேர் இறுதி களத்தில் உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள் அளவில் அரக்கோணத்தில் 216, ஆற்காட்டில் 116, மேல்விஷாரத்தில் 137, ராணிப்பேட்டையில் 126, சோளிங்கரில் 167, வாலாஜாவில் 84 மனுக்கள் பெறப்பட்டன. பேரூராட்சிகளில் அம்மூரில் 70, கலவையில் 49, காவேரிப்பாக்கத்தில் 64, நெமிலியில் 53, பனப்பாக்கத்தில் 44, தக்கோலத்தில் 65, திமிரியில் 56, விளாப்பாக்கத்தில் 46 பேர் என மொத்தம் 1,293 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது மற்றும் திரும்பப்பெறப்பட்ட நிலையில் 1,067 பேர் இறுதி களத்தில் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆற்காடு நகராட்சியில் 17-வது வார்டில் திமுக வேட்பாளர் கீதா நந்தகுமார், 25-வது வார்டில் திமுக வேட்பாளர் ஏ.என்.செல்வம் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். திமிரி பேரூராட்சியில் 13-வது வார்டு திமுக வேட்பாளர் லோகேஸ்வரி, விளாப்பாக்கம் பேரூராட்சியில் 13-வது வார்டு திமுக வேட்பாளர் விஜயா பழனி ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT