Published : 03 Feb 2022 08:48 AM
Last Updated : 03 Feb 2022 08:48 AM

'நீங்கள் தமிழகத்தில் திமுக ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள் ராகுல் ஜி!'- அண்ணாமலை பதிலடி

சென்னை: "நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள்" என்று ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது, "உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது" என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதனைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "வழக்கம்போல் உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் ராகுல் ஜி. நீங்கள் உங்கள் பேச்சில் தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல்கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழகமாகத் தான் இருக்கும். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். இப்போதைக்கு விடைபெறுகிறேன் சார். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு: முன்னதாக ராகுல் காந்தி தனது நாடாளுமன்றப் பேச்சில், "நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும்.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள்.

கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று முழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x