Published : 26 Jan 2022 11:26 AM
Last Updated : 26 Jan 2022 11:26 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் துறைக்கு வழங்கி, தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மது வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஒரு நல்ல தொடக்கம் ஆகும். ஆனாலும், மதுக்கடைகளை மூடும் அதிகாரம் கலால்துறையிடம் இருப்பதைவிட மக்களிடம் இருப்பதே சரியாகும். அதனால், தமிழகத்தில் மதுவை கட்டுப்படுத்துவதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பயனளிக்காது என்பதே உண்மை. ஒரு கிராமத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்பினால் அதற்காக அக்கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் அல்லது பெண்களில் 25 விழுக்காட்டினர் கலால் ஆணையரிடம் மனு அளிக்க வேண்டும்.
அந்த மனுவில் உள்ள கையெழுத்துகள் உண்மையானவையா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் வாக்கெடுப்புக்கு ஆணையிடுவார். வட்டாட்சியர் முன்னிலையில் அனைத்து பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புகளுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்காளர்கள் ஆதரவளித்தால் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படும். மதுக்கடைகளை மூடுவதற்கான தீர்மானம் ஒருமுறை தோல்வியடைந்தால் அடுத்த ஓராண்டுக்கு தீர்மானம் கொண்டுவர முடியாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த முறையில் எந்த தவறும் நிகழாது.
ஒரு கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கலால்துறையிடம் இருப்பதைவிட மக்களிடம் இருப்பதுதான் சிறந்ததாகும். அதற்கேற்ப தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT