Published : 05 Jan 2022 10:11 AM
Last Updated : 05 Jan 2022 10:11 AM

தமிழகம் முழுவதும் தடையை மீறி கடற்கரைகளுக்கு சென்ற164 பேர் மீது வழக்கு

சென்னை: கரோனா முடக்கத்தால் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

எனினும், மெரினா கடற்கரைக்குச் செல்ல தடை நீடிக்கிறது. இதனால் அருகேயுள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையில் பொதுமக்கள் கூடி பொழுதைக் கழித்தனர்.

இதேபோல, தமிழகம் முழுவதும் முக்கிய கடற்கரைகளுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் நீடித்தாலும், அருகே உள்ள மற்றொரு கடற்கரையில் பொதுமக்கள் கூடுகின்றனர்.

இதனால், கடற்கரைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம், கடற்கரைக்கு வரும் பொதுமக்களை தடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் கூடும் மக்கள்முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணித்து, உரியநடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, கடற்கரைப் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். மேலும், குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு போலீஸாரின் தடைகளை மீறிச் சென்ற 164 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்கள் 4 பேர் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் ஒருகுழுவாக இணைந்து, சாலைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். அப்போது வாக்குவாதம் செய்தால், அருகே நிற்கும் போலீஸ்காரர் உடனடியாக வழக்கு பதிவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x