Published : 31 Dec 2021 10:23 AM
Last Updated : 31 Dec 2021 10:23 AM

திருச்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை தொடங்கிவிட்டார் முதல்வர்: மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவிட்டார் என மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி தாயனூர் கேர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்து, அமைச்சர் கே.என்.நேரு பேசியது:

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கரோனா தீவிரமாக இருந்த சூழலிலும் மக்கள் நலன்தான் முக்கியம் என்று பணியாற்றியவர் முதல்வர். தொடர்ந்து, தனது பணி அனுபவத்தால் மழை- வெள்ள பாதிப்புகளின்போது மக்களுக்கான உதவிகளைச் செய்தார். திருச்சியை 2-வது தலைநகரம் ஆக்காவிட்டாலும் கூட அதற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று எம்.பி. சு.திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான நடவடிக்கைகளை 2, 3 மாதங்களுக்கு முன்பே முதல்வர் தொடங்கிவிட்டார்.

மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், முதல்வரை நம்பி வாக்களித்துள்ளனர். மத்திய மாவட்டமான திருச்சியில் செய்யும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களால், இந்த 41 தொகுதிகள் மட்டுமின்றி, இவற்றைச் சார்ந்த 70 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றார்.

ஆர்வம் காட்டும் முதல்வர்

விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

திருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும்போதும், மீண்டும் அங்கிருந்து திருச்சிக்கு வந்தபோதும் வழியில் தனது காரை நிறுத்தி மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ள முதல்வர் பெரும் ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் எங்கும் இல்லை என்பதை பார்த்து நாங்கள் பூரிப்படைந்தோம்.

அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வுகண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வர் இங்கு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் இன்னும் நிறைய திட்டங்களை வழங்க வேண்டும் என்றார்.

டெல்லி செங்கோட்டையில்...

திருச்சி சிவா எம்.பி பேசும்போது, ‘‘வரலாற்றில் குப்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், மொகலாயர்கள் காலம், சோழர்காலம், பல்லவர் காலம் என்ற வரிசையில் எதிர்கால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் காலம் என்றும் நிச்சயம் இடம்பெறும். பிற மாநில முதல்வர்கள் இவரை பாராட்டுவதுடன் இவரிடம் இருந்து கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள்.

ஆக.15-ம் தேதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும், இந்தக் கரம் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.

ஆற்றல்மிக்கவர் ஸ்டாலின்

திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் பேசியபோது, ‘‘நம் நாட்டைக் காக்க, மத்தியில் நல்லாட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாட்டில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் எதிர்பார்க்கின்றன. முக்கியமான அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்களை திருச்சியில் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மணப்பாறைக்கு அரசு கல்லூரி

கரூர் எம்.பி ஜோதிமணி பேசியபோது, ‘‘மணப்பாறையில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. அடுத்த முறை தமிழக முதல்வர் திருச்சிக்கு வரும்போது புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும். பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கும் கரும்புகளை மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் இருந்தும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது பேசியபோது, ‘‘மணப்பாறை பகுதிக்கு காவிரி உபரிநீரை அளிக்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x