Last Updated : 29 Oct, 2021 03:10 AM

 

Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM

பின் நம்பர் இல்லாத வைஃபை கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? - வாடிக்கையாளர்களுக்கு வங்கி அதிகாரிகள் ஆலோசனை

பின் நம்பர் இல்லாத வைஃபை கார்டுகளை வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொதுத் துறை, தனியார் வங்கிகள், புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கும், பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அவ்வப்போது பல்வேறு புதிய திட்டங்கள், சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ‘கான்டக்ட்லெஸ் கார்டு’ எனப்படும் வைஃபை கார்டுகளை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டே இந்த கார்டுகள் செயல்பாட்டுக்கு வந்தாலும், தற்போதுதான் வங்கிகள் இவற்றை அதிக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகின்றன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு டெபிட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான கார்டுகளையும் வைஃபை கார்டுகளாக வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இந்த கார்டுகளை எவ்வாறு பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்து அறிவித்துள்ளது.

ஆனால், வங்கிகள் இதுகுறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இல்லை. இதனால், சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

வைஃபை கார்டுகளை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

வைஃபை கார்டுக்கான கடன் பெறும் அளவு ரூ.2 ஆயிரத்தில் இருந்து இந்த ஆண்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான ஏடிஎம் கார்டுபோல, இந்த கார்டுகளை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் தேய்க்க தேவையில்லை. அத்துடன், பின் நம்பர் எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிய வேண்டியது இல்லை. ஸ்வைப்பிங் இயந்திரம் முன்பு கார்டை காட்டினாலே, பணம் கழிந்துவிடும்.

இந்த கார்டை பயன்படுத்தி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 5 முறை என ஒரு நாளில் ரூ.25 ஆயிரம் வரை பொருட்களை வாங்க முடியும். எனவே, இந்த வைஃபை கார்டு தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அதை எடுத்த நபர் அடுத்த சில நிமிடத்துக்குள் ரூ.25 ஆயிரத்துக்கு கடைகளில் பொருட்களை வாங்க முடியும். இந்த கார்டுகளுக்கு பின் நம்பர் கிடையாது என்பது, அவர்களுக்கு வசதியாக அமைந்து விடுகிறது.

எனவே, இந்த வைஃபை கார்டை அதிக கவனத்துடன் பயன்படுத்துவது அவசியம். ஓட்டல், கடைகளில் பயன்படுத்தும்போது, கார்டை கடைக்காரரிடம் கொடுப்பதற்கு பதிலாக ஸ்வைப்பிங் இயந்திரத்தில் நாமே நேரடியாக பயன்படுத்த வேண்டும். அத்துடன், பயன்படுத்திய பிறகு, பதிவு செய்யப்பட்ட நமது செல்போனுக்கு வரும் குறுந்தகவலையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வைஃபை கார்டுகளை பர்ஸில் வைக்கும்போது, அலுமினிய ஃபாயில் காகிதத்தில் மூடி வைக்க வேண்டும். அல்லது அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்ட ஆர்எஃப்ஐடி எனப்படும் கவர்களில் போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம், நமது பர்ஸ் அருகே ஸ்வைப்பிங் கருவியை கொண்டு வந்தாலும் பணம் எடுப்பது தடுக்கப்படும்.

மேலும், வைஃபை கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்தக் கூடியவர்கள் மட்டுமே இத்தகைய கார்டுகளை பயன்படுத்த வேண்டும். முடியாதவர்கள் வழக்கமான பின் நம்பர் மூலம் இயக்கப்படும் கார்டுகளையே பயன்படுத்தவும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x