Last Updated : 28 May, 2021 04:31 PM

 

Published : 28 May 2021 04:31 PM
Last Updated : 28 May 2021 04:31 PM

காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் இயங்காத குளிர்சாதனப் பெட்டிகள்: பிரேதங்களை பாதுகாக்க முடியாமல் தவிப்பு

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவனை பிணவறையில் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காததால் பிரேதங்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்துகளில் இறந்தோர், தற்கொலை செய்து கொண்டோர், கொலை செய்யப்பட்டோரின் உடல்கள் இங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இதுதவிர கரோனா அறிகுறியுடன் இறந்தோரை வாங்குவதற்கு உறவினர்கள் வராவிட்டாலோ, இதர இறப்புகளில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டதாலோ பிரேதங்களைப் பதப்படுத்தி வைக்க பிணவறையில் 8 குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு 4 குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காமல் பழுதடைந்தன. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு மீதியிருந்த நான்கும் பழுதடைந்தன. இதனால் இறந்தோரின் உறவினர்களே தனியாரிடம் வாடகைக்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கிக் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்துகிறது.

தவிர இறந்தோர் அடையாளம் தெரியாவிட்டால், உறவினர்கள் வரும் வரை, உடல்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும். தற்போது குளிர்சாதனப் பெட்டி இயங்காததால் பிரேதங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மீனாள் கூறுகையில், ‘குளிர்சாதனப் பெட்டியை வெளியில் வாடகைக்கு எடுத்தால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. ஏழைகளிடம் குளிர்சாதனப் பெட்டியை வாடகைக்கு எடுக்கச் சொல்வது வேதனையாக உள்ளது’ என்று கூறினார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்,‘ கரோனா சமயம் என்பதால் பழுதை சரிசெய்ய எலக்ட்ரீசியன்கள் முன்வருவதில்லை. விரைவில் பழுது நீக்கப்படும்’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x