Last Updated : 28 May, 2021 03:59 PM

 

Published : 28 May 2021 03:59 PM
Last Updated : 28 May 2021 03:59 PM

கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை மூலம் ஆக்சிஜன் அளவை சீராக வைக்க முடியும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை குறையும். எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை ரயில்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வந்து நிலைமையை சமாளித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை மூலம் ஆக்சிஜன் அளவை சீராக வைக்க முடியும். எனவே, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிப்பதுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிசியோதெரபி மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இச்சங்கத்தின் மகளிர் மருத்துவப் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் வினோதினி கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சின் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த ஆக்சிஜன் சிலிண்டரின் தேவையை கணிசமாக குறைக்க முடியும்.

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பிசியோதெரபி மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனா பாதிப்பின் ஆரம்ப நிலையில் நுரையீரலில் சளி உறைய ஆரம்பித்து, வெளியே வரமுடியாத நிலை உருவாவதால், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆரம்ப நிலையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் உறைந்த சளியை இலகுவாக்கி வெளியேற்ற முடியும். இதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும். நுரையீரல் பாதிப்பு குறையும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவையை தவிர்க்க முடியும்.

மேலும், பிசியோதெரபி சிகிச்சை மூலம் உடல் சேர்வை நீக்கி உடல் இயக்கத்தை சீராக வைக்க முடியும். எனவே, கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதால், நோயாளிகள் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப முடியும்.

இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை எடுக்கும் நாட்களை குறைக்க முடியும். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காத்திருக்கும் நோயாளிகளுக்கு விரைவாக படுக்கை வசதி கிடைக்கும். எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போர்க்கால அடிப்படையில் பிசியோதெரபி மருத்துவர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இதன் மூலம் கரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்க முடியும்.

ஏற்கனவே அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் தேசிய நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 400 பிசியோதெரபி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்து, கரோனா சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

அனைத்து தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்களை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நியமித்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்களை நியமிக்காமல் நான்கரை ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்களை தான் அரசு நியமிக்க வேண்டும்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, தமிழக பிசியோதெரபி கவுன்சில் முழுமையாக செயல்படவும், வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி பிரிவு தொடங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கரை ஆண்டு முழுமையாக படித்து மருத்துவம் பார்க்கும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என ஆவலோடு காத்திருக்கிறோம் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x