Published : 28 May 2021 04:22 PM
Last Updated : 28 May 2021 04:22 PM

தொலைக்காட்சிகளில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி உத்தரவிடக் கோரி வழக்கு:  உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை

கரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பும்படி தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

கரோனா தொற்று அபாயம், தொற்று ஏற்பட்டால் வரும் விளைவுகள், ஆக்சிஜன் தேவை, மூச்சுத்திணறல் என கரோனா குறித்து அச்சமூட்டும் பல்வேறு பொய்யான தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

இதைப் படிக்கும் மக்கள் உண்மை எனப் பொய்யான, பீதியூட்டும் தகவல்களை நம்பி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதேபோன்று சமூக வலைதளங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்பி, தடுப்பூசி போடுவதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இதனால் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உரிய தகவல்களைக் கொண்டுசேர்ப்பது சம்பந்தமாக குறிப்பிட்ட நேரம் இதற்கென ஒதுக்கி கரோனா குறித்த உண்மையான, நம்பகமான தகவல்களை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவரது பொதுநல மனுவில், “கரோனா தொற்றும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு காரணமாகவும் மக்கள் தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குகின்றனர். சமூக வலைதளங்களில் கரோனா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

கரோனா குறித்த உண்மையான தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதில் உள்ள அச்ச உணர்வைப் போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, “தனியார் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை கரோனா குறித்த செய்திகளை ஒளிபரப்பாமல் தவிர்க்க முடியாது. செய்திகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஏற்கெனவே விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. தடுப்பூசி போடும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பொது நலனைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது குறித்து மத்திய, மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x