Published : 25 Dec 2015 06:52 PM
Last Updated : 25 Dec 2015 06:52 PM

கூடங்குளம் போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுக: வைகோ

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை மக்கள் மன உறுதியுடன் அறவழியில் போராடி வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டபோது தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு நிர்வாகம், கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சு அபாயம் நேரிட்டால் மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

தங்கள் எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு, 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 380 பொய் வழக்குகளை தொடர்ந்தது. அதில் 1 லட்சம் பேர் மீது போடப்பட்ட 132 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசத் துரோகம், அரசுக்கு எதிரான போர், வெடிகுண்டு வீசுதல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் என கடுமையான பிரிவுகளின்கீழ் சாதாரண மக்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக உழைக்கும் மக்கள் நாள்தோறும் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரிய சட்டத்துக்கு எதிராக கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள 756 ஏக்கரில் தாதுமணல் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்.

கூடங்குளத்தில் மேலும் 4 அணுஉலைகளை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கைதாகியுள்ள கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் பொறுப்பாளர் முகிலனுக்கு மதிமுக எந்நாளும் துணை நிற்கும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x