Published : 06 Apr 2021 07:10 PM
Last Updated : 06 Apr 2021 07:10 PM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழி: கவச உடையுடன் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தார்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி முழுக்கவச உடையுடன் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தார். பின்னர் மீண்டும் ஆம்புலன்ஸில் புறப்பட்டுச் சென்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறை தொடங்கும் முன்னரே கடந்த நவம்பர் மாதமே ஸ்டாலின் தூதுவர்கள் என திமுகவின் முன்னணி நிர்வாகிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி தொகுதியாகச் சென்று திமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார். கனிமொழியின் நிதானமான ஆனால், விஷயம் தொனிக்கும் பேச்சுக்குத் தனி வரவேற்பு உண்டு.

கரோனா தொற்று குறைந்திருந்த காலத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்த கனிமொழி, மீண்டும் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கிய நேரத்திலும் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிகவின் பல வேட்பாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும், தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டவண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் கடைசியாக பாளையங்கோட்டையில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை மிரட்டியதைக் குறிப்பிட்டு, ‘தம்பி கை வைத்துத்தான் பாரேன்’ என்று சவால் விட்டுப் பேசினார். இந்நிலையில் அவர் சென்னை திரும்பினார்.

அவருக்கு உடல் சோர்வு இருந்த நிலையில் கரோனா பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தேர்தல் பிரச்சாரம் முடிய ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் கரோனா தொற்று காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் வாக்குப்பதிவு தினத்தில் வாக்காளர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற, கரோனா நோயாளிகளுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க வாய்ப்பளித்ததைப் பயன்படுத்திக் கொண்டார். ஆர்.கே சாலையில் உள்ள செயின்ட் அப்பாஸ் பெண்கள் பள்ளிக்கு முழுக் கவச உடையுடன் ஆம்புலன்ஸ் மூலம் வந்தார்.

அவர் வருவதற்கு முன்னரே வாக்குச்சாவடி மையத்தில் உள்ளவர்கள் அனைவரும் முழுக் கவச உடையுடன் தயாராக இருந்தனர். மாலை 6.30 க்கு ஆம்புலன்ஸ் மூலம் வந்த கனிமொழி வழக்கமான சரிபார்ப்புகளை முடித்தபின்னர் வாக்களித்தார். பின்னர் மீண்டும் ஆம்புலன்ஸில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலேயே கரோனா பாதித்த நிலையில் கவச உடையுடன் வந்து வாக்களித்த விஐபி கனிமொழியாகத்தான் இருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x