Published : 06 Apr 2021 06:02 PM
Last Updated : 06 Apr 2021 06:02 PM

தேர்தல் விதிமீறல்: உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

சென்னை

தேர்தல் பிரச்சாரத் தடை இருப்பதை மீறி விதிமீறலில் ஈடுபட்டதாக திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் நாளுக்கு 48 மணி நேரம் முன்னர் பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது என்பது விதி. ஆனால் இன்று வாக்களிக்க வந்த சேப்பாக்கம் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக கொடி, சூரியன் சின்னத்துடன் கூடிய எம்பிராய்டரி செய்யப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்.

இதைப் பார்த்த அதிமுகவினர் இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்துள்ளனர். அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

''நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், வாக்குப்பதிவு தினமான இன்று மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தச் சென்றபோது திமுக கொடியுடன் கூடிய சூரியனை தன்னுடைய சட்டையில் பதிந்து சென்று வாக்களித்துள்ளார். இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்.

தேர்தல் நடத்தை விதிமீறலின்படி பிரச்சாரம் முடிந்த பிறகு இருக்கக்கூடிய 48 மணி நேரப் பிரச்சாரத் தடையை மீறிய செயலாகும். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகவும் கருதப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறையின்படி பிரச்சாரம் முடிந்த பிறகு வாக்குப்பதிவு நிறைவடையும் வரை, யாரும் எந்தக் கட்சிக்கும் வேட்பாளருக்கும் சின்னத்திற்கும் வாக்குச் சேகரிக்கும் விதமாக ஆதரவு திரட்டும் முகமாக எந்தவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது என்பது விதி.

இந்த விதிகளை மீறும் வகையில் பொதுமக்களையும், வாக்காளர்களையும் திசை திருப்புகிற விதமாகவும், அவர்களின் மனநிலையை மாற்றுகின்ற விதமாகவும் தெரிந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளை உதயநிதி ஸ்டாலின் மீறி அவர் போட்டியிடுகின்ற சின்னமான சூரியனை சட்டைப்பையில் அணிந்து சென்று இருக்கின்றார். இந்த விதிமீறலால் அது தேர்தல் நடத்தை விதிமுறையின்படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படியும் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கக் கூடிய குற்றமாகும்.

எனவே, மேற்படி தெரிந்தே தேர்தல் நடத்தை விதிகளை, விதிமுறையை மீறி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x