Published : 16 Oct 2015 01:50 PM
Last Updated : 16 Oct 2015 01:50 PM

கொலைக்குற்ற தண்டனையில் வரையறை தேவை: நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தல்

“நாட்டில் கொலை வழக்கு குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது குறித்த சரியான வரையறைகளை வகுக்க வேண்டும்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி பேசினார்.

இந்திய குற்றவியல் கழகத்தின் 38-வது மாநாடு, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், இளையோர் மற்றும் பாலின குற்றங்கள், அதிகாரம் மற்றும் துஷ்பிரயோகம், தொழில்நுட்ப உலகமும் பாலியல் குற்றங்களும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குற்றவியல்துறையினர் உரையாற்றுகின்றனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து இந்திய குற்றவியல் கழகத்தின் தலைவர் பி.பி.பாண்டே பேசும்போது, “தற்போது நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிவகங்கையில் இளம்பெண்ணை அவரது தந்தை, சகோதரர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் நீதிமன்ற தலையீட்டால் வெளியே தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகள் தப்ப முயற்சிக்கின்றனர்.

இதேபோல் திருநெல்வேலியிலும் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும். அதிகாரமும் குற்றங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன. எனவே, அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலைகளில் மாற்றங்களை உருவாக்க வேண்டும்” என்றார் அவர்.

பேராசிரியர்களுக்கு விருது

குற்றவியல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் 6 பேராசிரியர்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி விருதுகளை வழங்கினார்.

விருது பெற்றவர்கள் விவரம்:

குமாரப்பா ரெக்ளஸ் விருது- மும்பை டாட்டா சமூக அறிவியல் கல்வி நிறுவன மனித உரிமைகள் துறைத் தலைவர் அரவிந்த் திவாரி, சுசில் சந்திரா விருது- ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீகிருஷ்ண தேவராவ், ஸ்ரீவஸ்தவா விருது- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறை உதவி பேராசிரியர் கே. ஜெய்சங்கர், இந்திய குற்றவியல் கழக பெல்லோஷிப் விருதுகள்- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் செய்யது உமர்கத்தாப், சென்னை பல்கலைக்கழக குற்றவியல்துறை பேராசிரியர் ரெம்யா மரியம் ராஜு, கர்நாடக அறிவியல் கல்லூரி குற்றவியல் மற்றும் தடய அறிவியல்துறை தலைவர் ஜெ.எல்.கல்யாண்.

நீதிபதி வேண்டுகோள்

விழாவில் நீதிபதி ஜோதிமணி பேசியதாவது:

குற்றங்களுக்கான ஆதாரங்களையே நீதிமன்றங்கள் பார்க்கின்றன. அவ்வாறான ஆதாரங்கள், வழக்கின் தன்மை, குற்றப்பத்திரிகை, நேரடி சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கொலை வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கிறது.

கொலை வழக்கு குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது குறித்த சரியான வரையறைகள் நம் நாட்டில் வகுக்கப்படவில்லை. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் உரிய வரைமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதால் உரிய தீர்ப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய வரைமுறைகளை வகுக்க இதுபோன்ற மாநாடுகள் அழுத்தமான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பி.ஜோதிமணி பேசினார்.

மலர் வெளியீடு

இந்திய குற்றவியல் கழக அறிக்கையை செயலாளர் எஸ்.லதா தாக்கல் செய்தார். மாநாட்டு கட்டுரைகள் மலரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான்டி பிரிட்டோ வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.எல்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறை தலைவர் பி.மாதவசோமசுந்தரம் வரவேற்றார். இந்திய குற்றவியல் கழக துணைத் தலைவர் ஆர்.திலக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x