Last Updated : 09 Dec, 2020 07:07 PM

 

Published : 09 Dec 2020 07:07 PM
Last Updated : 09 Dec 2020 07:07 PM

விளைபொருட்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் போராட்டம்: ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிடில், தமிழ்நாட்டில் இருந்து விவசாய விளைபொருட்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகப் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி மாவட்டம் குழுமணியில் இன்று டிராக்டர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டிபிகே பிரசன்னா வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கு.ப.சிவபெரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழுமணி எம்ஜிஆர் சிலையில் தொடங்கி, கோப்பு மற்றும் அயிலாப்பேட்டை தேர் வீதிகளைச் சுற்றி, மீண்டும் குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே டிராக்டர் பேரணி நிறைவடைந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் ஜல்லிக்கட்டுக் காளையொன்றும் அழைத்து வரப்பட்டது. பேரணியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்துப் பிரசன்னா வெங்கடேசன் கூறும்போது, "விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிட்டால் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைந்து, ஆலோசனை நடத்தி, டெல்லிக்கு டிராக்டர் பேரணி நடத்தப்படும். அல்லது தமிழ்நாட்டில் இருந்து விவசாய விளைபொருட்களைப் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை எல்லைகளில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x