Published : 08 Oct 2020 07:47 AM
Last Updated : 08 Oct 2020 07:47 AM

‘கீர்த்தி சக்ரா’ விருதுபெற்ற லெப்டினென்ட் பார்த்திபன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

லெப்டினென்ட் பார்த்திபனின் 14-ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் மேஜர் நடராஜன், தமிழ்செல்வி. இவர்களது மகன் பார்த்திபன். இவர் தனது 23-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றினார்.

2006-ம் ஆண்டு இதே தினத்தில், 12 பேர் கொண்ட தீவிரவாதக் குழு எல்லையில் ஊடுருவியதைத் தடுத்துப் போரிட்ட பார்த்திபன், வீரமரணம் அடைந்தார். அவரது ஈடு இணையற்ற தியாகம், வீரம், தலைமைப் பண்பு காரணமாக ராணுவம் அவருக்கு ‘கீர்த்தி சக்ரா' விருது அளித்து கவுரவித்தது. மேலும், ராணுவத்தில் சேர்ந்து 6 மாதங்களே ஆன நிலையில் பார்த்திபன் வீரமரணம் அடைந்தார்.

அவரின் நினைவாக, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சிமையத்தில் மார்பளவு சிலைவைக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூர், பல்லாவரத்தில் ஒரு தெருவுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பார்த்திபனின் 14-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள அவரது சிலைக்கு கர்னல் அமெர்சி திரிபாதி,கர்னல் ராஜசேகர், கர்னல் பாலசுப்பிரமணியம், அனகாபுத்தூர் மருத்துவர் ஏ.வி.குமார் மற்றும் பார்த்திபனின் பெற்றோர் மாலை அணிவித்து அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x