Published : 28 Sep 2020 12:12 PM
Last Updated : 28 Sep 2020 12:12 PM

கிராம சபைக் கூட்டத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட இணையவழிக் கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதனை சென்னை அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைத்து பி.ஆர்.பாண்டியன் நடத்தினார். இதில் பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் உட்பட 22-க்கும் மேற்பட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது.

"மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றிவிட்டு, மாநில அரசுடன் சேர்ந்து விவசாயிகளிடம் தவறான தகவலைச் சொல்லி திசை திருப்ப முயல்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் முழுமையும் இந்திய விவசாயிகளைப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதாகும். அவை விளை நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்க வழிவகுக்கும். இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் தொடரும். மத்திய, மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்வது கைவிடப்படும்.

எனவே இதனைத் தடுத்து நிறுத்த இந்தியா முழுமையிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருக்கின்ற கிராம சபைக் கூட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான கொள்கை முடிவைக் கைவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தமிழ்நாடு முழுமையிலும் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவார்கள்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக விவசாயிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

தொடர்ந்து அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை விரைவில் தமிழகத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம் விரைவாக அதற்கான தேதியை அறிவிப்போம். விவசாயிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு இந்தச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காவிட்டால் இந்திய விவசாயிகளும் வணிகர்களும் பேரழிவைச் சந்திப்பார்கள்.

தமிழகத்தில் நெல் கொள்முதலை 2021-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் கைவிடும் பேரபாயம் ஏற்படும். எனவே இதுகுறித்துத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியாயப்படுத்துவதைக் கைவிட்டு, சட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என வேண்டுகிறேன்.

மேலும் தமிழகம் முழுமையிலும் குறுவை அறுவடை தீவிரம் அடைந்து வருகிறது. அக்டோபர் 20-ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நெல் கொள்முதலில் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அறுவடை செய்யும் நெல்லை, அன்றாடம் கொள்முதல் செய்கிற வாய்ப்பைத் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 800 சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. அறுவடை செய்யும் நிலப்பரப்பின் அளவைக் கணக்கிட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவையான கிராமங்களில் ஏற்படுத்தி அனைத்து நெல்லையும் உடன் நிபந்தனையின்றிக் கொள்முதல் செய்ய வேண்டும்.

அக்டோபர் 1 முதல் புதிய விலை அமல்படுத்துவதைக் காரணம் காட்டி ஒருவாரமாக நெல் கொள்முதல் நிலையங்களை நிறுத்துவது பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. எனவே தொடர்ந்து கொள்முதல் செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரையிலும் காவிரி டெல்டாவில் கூட்டுறவுக் கடன் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. பழைய நடைமுறையைப் பின்பற்றிக் கடன் வழங்குவதற்கு கூட்டுறவுப் பதிவாளர் அறிக்கை வெளியிட்டும் அதனைப் பின்பற்றுவதற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே உடனடியாக முதல்வர் தலையிட்டு அனைவருக்கும் நிபந்தனையின்றிக் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.''

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x