Published : 28 Sep 2020 09:43 AM
Last Updated : 28 Sep 2020 09:43 AM

மலட்டு விதை நடவு செய்ததால் மகசூல் பாதிப்பு: கால்நடைகளுக்கு தீவனமான நெற்பயிர்கள் - ஆரணி, களம்பூர் பகுதி விவசாயிகள் வேதனை

ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் புதிய ரக விதை நெல்லை சாகுபடி செய்த விவசாயிகள் மகசூல் கிடைக்காமல் இழப்பை சந்தித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய ரக நெல் விதைகளை தி.மலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் உள்ள கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி களம்பூர், புலவன்பாடி, சீனிவாச புரம், முக்குரும்பை மற்றும் அய்யம் பேட்டை உள்ளிட்ட பல கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகள் வாங்கிச் சென்று கடந்த சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடவு செய்துள்ளனர். பின்னர், நெற் பயிர்களுக்கு தேவையான உரம்உள்ளிட்டவைகளை பயன்படுத் தியும், 120 நாட்கள் கடந்தும் கதிர் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, “120 நாட்களில் அதிக மகசூல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டதால், புதிய ரக நெல் விதைகளை வாங்கி நடவு செய்தோம். ஆனால், 120 நாட்கள் கடந்தும் நெற்கதிர் இல்லை. இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதன்படி, அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது மலட்டுத் தன்மை கொண்ட விதை நெல்லை நடவு செய்துள்ளதாக தெரிவித்தனர். ஓர் ஏக்கருக்கு 40 மூட்டைகள் கிடைக்க வேண்டிய இடத்தில் 4 மூட்டைகள் கூட கிடைக்கவில்லை.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் புதிய ரக நெல்லை நடவு செய்து சாகுபடி கிடைக்காமல் போய்விட்டது. ஓர் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது உழைப்பும் வீணானது. விவசாய நிலங்களில் களைகள் போன்று வளர்ந்துள்ள நெற் பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளில் தரமான விதை நெல் விற்பனை செய்வதை வேளாண்மைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x