Last Updated : 28 Sep, 2020 09:37 AM

Published : 28 Sep 2020 09:37 AM
Last Updated : 28 Sep 2020 09:37 AM

பலவீனமான கரைகளால் பல கோடி வீணானது: வெலிங்டன் ஏரிக்கரை சீராவது எப்போது? - 36 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் கேள்வி

கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது வெலிங்டன் ஏரி. 1913-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட வெலிங்டன் ஏரி 2,580 மில்லியன் கன அடிக்கு நீர் பிடிப்பு கொண்டது. 4.25 கி.மீட்டர் நீளம் உடையது.

வசிஷ்டா நதி, ஸ்வேதா நதியிலி ருந்து வெளியேறும் தண்ணீர் வெள்ளாறு வழியாக வெலிங்டன் ஏரியை சென்றடைகிறது. இந்த ஏரியால் விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களில் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த ஏரியில் இருந்து 27 துணை ஏரிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு, 12 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது.

களி மண்ணால் ஆன இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு 30.8 கி.மீ தூரம் உடைய மேல் மட்ட கால்வாய், 12.9 கி.மீ தூரம் உடைய கீழ் மட்ட கால்வாய் மூலம் முப்போகம் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.

கரைந்து வரும் கரை

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஏரியில் அவ்வப்போது கரை சரிவதும், அது சரிசெய்ய நிதி ஒதுக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.

கரை சீரமைப்பிற்காக 1997-ம் ஆண்டு ரூ.60 கோடி, 2010-ம்ஆண்டும் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கரை பலப்படுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கரை தொடர்ந்து பலவீனமாகவே இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது,ஏரியின் ஒரு பகுதி கரை உள்வாங் கியது. அப்போது இக்கரையை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சி யர் மற்றும் பொதுப்பணித் துறை யினர் சேதமடைந்த கரைப் பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர்ரூ.1 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டு கரை சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கரை பலமிழந்து காணப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வெலிங்டன் ஏரி பாசன வாய்க்கால் விவசாய சங்கத் தலைவர் மருதாச்சலம் கூறுகையில், “கடந்தாண்டு பெய்த தென்மேற்குப் பருவ மழையில், வெலிங்டன் ஏரிக் கரையின் உள்வாங்கிய பகுதியில் 100 மீட்டர் அளவுக்கு மீண்டும் சேதமடைந்தது.

இந்தச் சேதத்தை கண்டு கொள்ளாமல் விட்டால், அடுத்து வரும்மழைக் காலங்களில் ஏரியை ஒட்டி யுள்ள அதர்நத்தம், வெங்கனூர் ஓடைகள் மற்றும் ராமநத்தம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் எஞ்சியகரைப் பகுதிகளும் உடைந்து சேதம் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தோம்.

ஆனாலும், இதுநாள் வரை தீர்வு ஏற்படவில்லை. கரை பலவீன மாகவே உள்ளது. மண்ணாலான கரை என தெரிந்தும், எங்கு பல வீனமாக உள்ளது என்பதை இது வரை பொதுப்பணித் துறையினர் கண்டறியவில்லை.

இந்த கரையைப் பலப்படுத்த பலமுறை நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வில்லை. இப்பிரச்சினைக்காக பருவமழை தொடங்குவதற்கு முன் விவசாயிகளை திரட்டி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்“ என்று தெரிவித்தார்.

இச்சிக்கல் தொடர்பாக பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் சோழராஜனிடம் கேட்டபோது, “ஏரியின் பராமரிப்பு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், ஏரிக் கரையை பலப் படுத்துவது தொடர்பாக அணை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டக் குழு ஆய்வு செய்துள்ளது. அக்குழுவின் வழிகாட்டுதல்படி தான் கரை பலப்படுத்தும் பணி தொடங்கும்.

இதற்கிடையே வெலிங்டன் ஏரியை தூர்வார ரூ. 192 கோடி யில் திட்ட மதிப்பீடு செய்து, பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.அரசு ஆணையை எதிர்நோக்கி யுள்ளோம்“ என்றார்.

இந்நிதி வரும் பட்சத்தில், இந்த முறையாவது இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கரையை உறுதியாக பலப்படுத்த வேண்டும்; அதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x