Last Updated : 22 Sep, 2015 09:38 AM

 

Published : 22 Sep 2015 09:38 AM
Last Updated : 22 Sep 2015 09:38 AM

ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்தது ஏன்? - வாக்குமூலத்துக்கு காத்திருக்கும் போலீஸ்

பொட்டு சுரேஷ் கொலைச் சம்பவத் துக்கு முன்பு, சென்னை சென்று மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்தார். இத்தகவலை கைதான அவரது உறவினர் ஏற்கெனவே வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அதுதொடர் பாக, அட்டாக் பாண்டி என்ன சொல்வார் என காத்திருக்கிறது தமிழக போலீஸ்.

மு.க. அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்த பொட்டு சுரேஷ், 31.1.2013-ல் கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த 2-வது நாளே அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான கீரைத் துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத் தினம், சந்தானம், ராஜா என்ற ஆசா முரு கன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் அளித்த வாக்கு மூலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது.

இதில் சந்தானம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்ததாவது: அட்டாக் பாண்டியை அவரது அக்காள் மகன் திருச்செல்வம் தரப்பை வைத்தே கொலை செய்ய பொட்டு சுரேஷ் திட்ட மிட்டிருந்தார். இந்த சதி தனது இன்னொரு அக்காள் மகன் விஜயபாண்டி மூலம் அட்டாக் பாண்டிக்கு தெரியவந்தது.

உடனே, “கடந்த திமுக ஆட்சியில் பொட்டு சுரேஷ் நம்மை சம்பாதிக்க விடாமல் செய்துவிட்டார். அழகிரி அண்ணனிடமும் நெருங்கவிடாமல் செய்துவிட்டார். என்கவுன்ட்டரில் கொல் வதற்காக போலீஸை வைத்து, நம்மை ஊர் ஊராகத் துரத்துகிறார். இதற்கு மேலும் அவரை விட்டு வைத்திருக்கக் கூடாது எனச் சொல்லியிருக்கார்” அட்டாக் பாண்டி.

இதை என்னிடம் சொன்ன விஜய பாண்டி, எப்படியாவது நாம் பொட்டுவை போட்டுத் தள்ள வேண்டும் எனச் சொன்னார். இதற்குப் பிறகு, ஒருநாள் சென்னையில் மு.க.ஸ்டாலினை அவரது வீடு அருகே சென்று சித்தப்பா (அட்டாக் பாண்டி) சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது நான், விஜய பாண்டி, பிரபு 3 பேரும் ஒன்றாகப் போயிருந்தோம்.

2 நாள் கழித்து பாண்டி பஜார் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மருமகன் ஆகியோருடன் சித்தப்பா மட்டும் தனியாக பேசினார். இந்த சந்திப்பு முடிந்த மறுநாள் நான், விஜய பாண்டி, பிரபு 3 பேரும் மதுரைக்கு வந்துவிட்டோம். எனவே இந்தச் சந்திப்பின்போது என்ன பேசினர் என்பது எங்களுக்குத் தெரியாது. அட்டாக் பாண்டி முன்கூட்டியே மதுரையில் இருந்து வெளியேறிவிட் டதால், கொலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தியது அவரது அக்காள் மகன் விஜயபாண்டியும், அவரது நண்பர் பிரபுவும்தான். அவர்களுக்குத்தான் மேல் விவரம் தெரியும்” என்று கூறப்பட்டிருந்தது.

“அழகிரி மீதான அதிருப்தியில், ஸ்டாலின் அணிக்கு தாவிய அட்டாக் பாண்டி, அதற்காகவே ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தினார். இதை அறிந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, அட்டாக் பாண்டியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அட்டாக் பாண்டி அவர்களை சந்தித்ததை மட்டுமே வைத்துக்கொண்டு ஸ்டாலின், அழகிரியை போலீஸார் மிரட்டப் பார்க்கிறார்கள்” என்று திமுகவினர் அப்போதே குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், விஜயபாண்டியும், பிரபுவும் அடுத்த ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ‘அட்டாக் பாண்டி சொன்னதால் கொலை செய்தோம். அதற்கு மேல் எதுவும் தெரியாது’ என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் கொலை நடந்த இரண்டரை ஆண்டுகள் கழித்து அட்டாக் பாண்டி கைதாகி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி வரலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x