

தென் மாவட்டங்களில் பெய்யும் மழையால் செடிகளிலே தக்காளி அழுகுவதாலும், உதிர்ந்து விழுவதாலும் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதனால், இன்று மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கரோனாவால் காய்கறிகள் விலை அதிகமாகவே விற்பனையானது. கரோனா தொற்று பரவல் குறைந்தபோதும் இன்னும் காய்கறிகள் விலை குறையவில்லை.
சில காய்கறிகள் விலை குறைவதும், திடீரென்று உயர்வதுமாக நிலையான விலையில்லாமல் உள்ளன. கடந்த வாரம் வரை தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு சென்ட்ரல் மார்க்கெட்டில் விற்பனையானது. ஆனால், தற்போது கிலோ 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், ‘‘கடந்த வாரம் வரை குறைந்தப்பட்சம் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை தக்காளி விலை இருந்தது.
தற்போது திடீரென்று கிலோ 50 ரூபாயாக உயர்ந்தது. தற்போது தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் தக்காளி செடிகளிலே அழுகி வருகின்றன. காற்றிலும், மழையிலும் கீழே உதிர்ந்து விழுகின்றன.
அதனால், வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது. அதுபோல், புது இஞ்சி 40 ரூபாய், காய்ந்த இஞ்சி 90 ரூபாய்க்கு விற்கிறது. கத்திரிக்காய் 25 ரூபாய், வெண்டைக்காய் 20 ரூபாய், அவரைக்காய் 40 ரூபாய், பட்டர் பீன்ஸ் 70 ரூபாய், சோயா பீன்ஸ் 50 ரூபாய், முட்டைகோஸ் 15 ரூபாய், பீர்க்கங்காய் 25 ரூபாய், அவரைக்காய் 40 ரூபாய், புடலங்காய் 25 ரூபாய், முருங்கக்காய் 35 ரூபாய், பாகற்காய் 30 ரூபாய், பீட்ரூட் 10 ரூபாய், காரட் 25 ரூபாய், சின்ன பாகற்காய் 40 ரூபாய், சின்ன வெங்காயம் 35 ரூபாய், பல்லாரி 20 ரூபாய்க்கு விற்கிறது, ’’ என்றார்.