Published : 07 Sep 2020 07:29 PM
Last Updated : 07 Sep 2020 07:29 PM

நூலகம் திறக்கப்பட்டாலும் புத்தகங்களைத் தேடி எடுக்க அனுமதி இல்லை: அதிருப்தியில் நாகர்கோவில் நூலக வாசிப்பாளர்கள்

கரோனாவால் மூடப்பட்ட பொது நூலகங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் திறந்திருக்கின்றன. ஆனால், நூலகங்களுக்குள் சென்று புத்தகம் எடுக்க நூலகப் பணியாளர்கள் அனுமதிக்க மறுப்பதால் நூலக வாசிப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நூலக வாசகரும், வழக்கறிஞருமான பாவேல் சக்தி இந்து தமிழ் திசை இணையத்திடம் கூறுகையில், “இந்தக் கரோனா காலத்தில் வாசிப்புப் பிரியர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு புத்தக வாசிப்புதான். நூலகங்கள் மூடப்பட்டிருந்த காலத்தில் வீட்டில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களை வாசித்துப் பொழுது நகர்ந்தது. சில தினங்களுக்கு முன்புதான் மீண்டும் நூலகங்கள் திறக்கப்பட்டன. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரை இயங்கும் நூலகங்கள் இப்போது மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்குகின்றன.

அரசு அறிவிப்பின்படி, நூலகத்துக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றவேண்டும் என்பதுடன் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், சளி மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் நூலகத்துக்குள் அனுமதியில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து நூலகங்களும் இந்த நடைமுறைகளைப்பின்பற்றுகின்றன.

அதேநேரம், நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட மைய நூலகத்திலோ அனைத்து வாசகர்களையுமே புத்தகம் எடுக்க நூலகத்துக்குள் அனுமதிப்பது இல்லை. பொதுவாகவே நூலகத்தில் சட்டம், அரசியல், இலக்கியம், பெண்கள், மருத்துவம் என ஒவ்வொரு பகுதியாக இருக்கும். அதில் வாசகர்களே நேரடியாகத் தேடி எந்தப் புத்தகம் வேண்டும் என முடிவு செய்வார்கள். ஆனால், இப்போது நூலகத்துக்குள் வாசகர்களை புத்தகங்கள் தேட அனுமதிப்பது இல்லை. அதற்குப் பதிலாக வாசலிலிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். நாம் புத்தகத்தின் பெயரைச் சொன்னால் நூலகப் பணியாளர்தான் எடுத்துத்தருகிறார். இதனால் நம் விருப்பத்துக்கு, புத்தகத்தைத் தேர்வு செய்வது இல்லாமல் போகிறது.

ஏதேனும் ஒரு தலைப்பில் குறிப்புக்காக புத்தகங்களை தேடும்போது பல புத்தகங்களையும் பார்த்துத்தான் ஏதேனும் ஒரு புத்தகத்தை தேர்வுசெய்வோம். இங்கே விருப்பத்துக்கு இடம் இல்லாமல் போகிறது. நூலகத்தை கண் முன்னே விரியும் அறிவுக்கடல் என்பார்கள். அதை பூட்டித் தாழிட்டு வாசகனை வாசலோடு நிறுத்துவது நீச்சல் வீரனைக் கடற்கரையில் கால் நனைத்துத் திரும்பச் சொல்வதைப் போன்றது.

65 வயதுக்கு மேற்பட்டோரையும், 15 வயதுக்கு கீழ் உள்ளோரையும்தான் அரசு உள்ளே அனுமதிக்க தடை விதித்துள்ளது. ஆனால், நாகர்கோவில் நூலகப் பணியாளர்கள் அனைத்து வாசகர்களையும் அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இதனால் வாசகர்களுக்கும், நூலகத்துக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிடும்.

இதேபோல் குறிப்புதவி நூல்களைப் படித்துப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களையும் நூலகத்துக்குள் அனுமதிப்பதில்லை. அரசு நூலகத் துறையை இயங்க அனுமதித்திருக்கும் அதேவேளையில், அது எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கண்காணிப்பதும் அவசியம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x