Last Updated : 07 Sep, 2020 06:21 PM

 

Published : 07 Sep 2020 06:21 PM
Last Updated : 07 Sep 2020 06:21 PM

பாஜகவில் இருந்து விலகத் திட்டமா?- எஸ்.வீ.சேகர் பேட்டி

அதிருப்தியில் இருக்கும் நடிகர் எஸ்.வீ.சேகர் பாஜகவில் இருந்து விலகப் போகிறார், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறார் என்று வரும் தகவல்கள் உண்மையா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு எஸ்.வீ.சேகர் பதில் அளித்துள்ளார். 'இந்து தமிழ்' இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

பொது முடக்க காலம், பொது முடக்கத் தளர்வு. உங்களைப் பொறுத்தவரையில் என்ன வித்தியாசம்?

சென்னை வெள்ளத்தின்போது, 3 நாட்கள் மின்சாரம், செல்போன் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்க நேர்ந்தபோதுதான், தன்னுடைய பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று பேசித் தெரிந்துகொண்டார்கள் சில பெற்றோர்கள். அப்படிக் கடவுள் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு இந்தப் பொது முடக்கம். மார்ச் 22 இயக்குநர் விசு மரணத்திற்காக வெளியே சென்றது. அதன் பிறகு நான் வெளியே போகவேயில்லை. வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளவும், நம் மீது உண்மையிலேயே அக்கறையுள்ள உறவுகள் யார் என்பதை அறிந்துகொள்ளவும் இந்த பொது முடக்கம் பயன்பட்டது.

கணவன் - மனைவிக்குள் பிரச்சினை என்றால், இனிமேல் உலகத்தில் யாருமே கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்லிட முடியாது. அந்தப் பிரச்சினையை மீறி எப்படி வாழ்வது என்று பார்க்க வேண்டும். அதுதான் நியூ நார்மல். அம்பானி தொடங்கி அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறவர்கள் வரையில் எல்லோரையும் இந்த கரோனா காலம் பாதித்திருக்கிறது.

ஒருத்தர் 50 ரூபாய் கிடைத்தால்தான், அடுத்த வேளை சாப்பாடு சாப்பிட முடியும் என்று புலம்புவார். அம்பானி போன்றவர்கள் 500 கோடி இருந்தால்தானே அடுத்த மாதம் சம்பளம் போட முடியும் என்று புலம்புவார்கள். எனவே, வேலை, தொழில் வசதிக்காக பொது முடக்கத் தளர்வு அவசியம்தான். அதற்காக மீன் மார்க்கெட்டில் குவிவதும், மாஸ்க்கை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போவதும் கூடாது. அரசாங்கம் மாஸ்க் போடச் சொல்வது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முதல்வருக்கும் கரோனா வராமல் தடுப்பதற்கல்ல; நமக்காகத்தான். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் வர இன்னும் 6 மாதம் ஆகலாம். அதுவரையில் நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் எஸ்.வீ.சேகர், இனி சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுகூட சினிமாவில் நடிப்பார் என்று வருகிற தகவல்கள் உண்மையா?

'சினிமாவில் இனி நடிக்கவே மாட்டேன்' என்று நான் எப்போதும் சொன்னதே இல்லை. நான் அமெரிக்கத் தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, ஃபாரினில் செட்டில் ஆகிவிட்டேனா என்ன? வாராவாரம் நாடகம் போட்டுக் கொண்டுதானே இருந்தேன். ஆனால், என்னைப் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் நேரடியாக என்னிடம் பேசாமல், புரொடக்ஷன் மானேஜரிடம் சொல்லியிருக்கிறார்கள் போல. அவர்கள், “எஸ்.வீ.சேகர் அரசியலில் பிஸியாக இருக்கிறார்; நடிக்க மாட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர், “சேகர் இயக்குநர்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள். ராமநாராயணன், விசு மட்டுமல்ல இயக்குநர் ஷங்கர் வரையில் எல்லோரிடமும், ஒரு நடிகனாக என்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறேன். நான் 24 மணி நேரமுமா அரசியல் செய்கிறேன்? நடிப்பதற்கு எப்போதும் தயார்தான்.

பொது முடக்கம் முற்றாக முடிந்ததும், ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். அது என்ன படம் என்பதைத் தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார். தொடர்ந்து படங்களில் நடிக்கும் திட்டத்தில்தான் இருக்கிறேன். பொது முடக்கத்துக்குப் பிறகு இரண்டு மடங்கு சம்பளம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அல்லவா, அதில் பாதி சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு வேண்டுமானால் நடிப்பேன் (சிரிக்கிறார்). என்னுடைய மகன் அஸ்வினும், இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். என்ன ஒன்று, சினிமா படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டு முறையில் இனி நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியதிருக்கும்.

பாஜகவில் நமக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை, திடீரெனக் கட்சிக்கு வருவோருக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்று வருத்தத்தில் இருக்கிறீர்களாமே?

அண்ணாமலை ஐபிஎஸ்ஸுக்குப் பதவி கொடுத்ததைத் கேட்கிறீர்களா? அது நல்ல விஷயம். அதற்கு நான் ஏன் வருத்தப்படப் போகிறேன். அவர் என் மகனைவிட ஒரு வயது குறைந்தவர் என்றாலும் நேர்மையானவர். அறிவாளிகளையும், பிரபலமானவர்களையும் எந்தக் கட்சி அங்கீகரிக்கிறதோ அந்தக் கட்சிக்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது என்று அர்த்தம். பிரபலமானவர்களைப் பார்த்தாலே ஒரு கட்சி பயப்படுகிறது என்றால், தன்னம்பிக்கை இல்லாத தலைவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கலைஞரும், ஜெயலலிதாவும் யார் தங்கள் கட்சியில் சேர்ந்தாலும் பயப்பட மாட்டார்கள். இவர்கள் எங்கே நம்மை ஓவர்டேக் செய்துவிடுவார்களோ என்று நினைக்க மாட்டார்கள். ஏனென்றால், இவர்களைவிட நாம் பிரபலமானவர்கள், ஆளுமை மிக்கவர்கள் என்கிற தன்னம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சோ என்னை மோடியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதே, அவரிடம் நீங்கள்தான் அடுத்த இந்திய பிரதமர் என்றேன். அதேபோல அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, நேரில் சந்தித்து வாழ்த்தினேன். அப்போது அவர் கேட்டுக்கொண்டதால் கட்சியில் இணைந்தேன்.

1991 முதல் 2004 வரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்தவன் நான். அதிமுகவுக்குப் போய்விட்டு, மீண்டும் 2010-ல் பாஜகவில் இணைந்த பிறகும் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் சார்ந்த கட்சி என்னைப் பயன்படுத்திக்கொண்டால் கட்சிக்கு நல்லது. பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

பாஜகவில் ரவுடிகளும், திருடர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் என்கிற விமர்சனம் இருக்கிறதே?

அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் பொதுவாகச் சொல்கிறேன். குற்றப்பின்னணி உள்ளவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க ஆரம்பித்தால, கட்சிப் பெயர் கெட்டுப்போய்விடும். பாஜக என்பது அகில இந்திய ரீதியிலும், அகில உலக ரீதியிலும் மதிக்கப்படுகின்ற கட்சி. எனவே, கவனம் வேண்டும். கட்சிக்கு விசுவாசிகள் தேவையில்லை. நேர்மையானவர்கள்தான் முக்கியம். விசுவாசம் என்பது யாரோ ஒருவர் மீது வைப்பது. நாளையே அது இன்னொருவர் மீது மாறிவிடக்கூடும். நேர்மை என்பது எல்லோரிடமும் நேர்மையாக இருப்பது.

தமிழகத்தில் பாஜகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்வதைப் பார்த்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை அதிமுக கழற்றி விட்டுவிடும் போலத் தெரிகிறதே?

கூட்டணி பற்றி டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் என்னவென்று, நவம்பர் மாதத்திற்குப் பிறகு தெரியும். மதுரையில் ஒரு புதிய கட்சி தொடங்கப்படும்போது, எல்லாமே மாறும்.

ரஜினி கட்சி தொடங்குவதைப் பற்றிச் சொல்கிறீர்களா? ரஜினி கட்சி தொடங்கினால் அங்கே போய்விடுவீர்கள் என்று சொல்லலாமா?

மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு கதவு அடைக்கப்பட்டால், 10 கதவுகள் திறக்கும். ஆனால், இப்போதைக்கு பாஜகவைவிட்டு விலகும் எண்ணத்தில் நான் இல்லை. அப்படி ஏதாவது முடிவெடுத்தாலும், நண்பர் மோடியிடம் தெரிவித்து விட்டுத்தான் எடுப்பேன். எனக்கு யார் மீதும் வருத்தமும் இல்லை, பொறாமையும் இல்லை. இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்று நினைக்கிறவன் நான்.

'இந்தி தெரியாது போடா' என்று நடிகர்கள் சிலர் டிசர்ட் போட்டு, இந்தியை எதிர்க்கிறார்களே?

எத்தனை லட்சம் தமிழர்கள் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்? அதில் கனிமொழி, வெற்றிமாறனைத் தவிர வேறு யாரையும் “இந்தி தெரியாதா?” என்று எந்தப் பாதுகாவலரும் கேட்டதில்லையே? எனக்குக் கூடத்தான் இந்தி தெரியாது. எனக்கு அப்படி எந்த அவமானமும் நேரவில்லையே? சும்மா விளம்பரத்திற்காக இப்படி அரசியல் செய்கிறார்கள். இந்த விளம்பரம் டிசர்ட் வியாபாரத்திற்கு வேண்டுமென்றால் உதவும். தமிழ், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு உதவாது.

வழக்கமாக உங்கள் பேட்டி காரசாரமாக இருக்கும். தேசியக் கொடி அவமதிப்பு பிரச்சினைக்குப் பிறகு அடக்கி வாசிக்கிறீர்களா?

அந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொல்ல முடியாது. ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். 20 வருடமாக சட்டையில் தேசியக் கொடியுடன் வலம் வரும், தேச பக்தன் நான். அதேநேரத்தில் எனக்கு உண்மை என்று தோன்றுவதை, உரக்கச் சொல்லத் தயங்க மாட்டேன்.

இவ்வாறு எஸ்.வீ.சேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x