Published : 23 May 2020 21:16 pm

Updated : 23 May 2020 21:18 pm

 

Published : 23 May 2020 09:16 PM
Last Updated : 23 May 2020 09:18 PM

இலவச மின்சாரம் எம்ஜிஆர், ஜெயலலிதா திட்டம்: விவசாயிகளுக்கு அரசு துணை நிற்கும்: முதல்வர் பழனிசாமி பேட்டி

free-electricity-mgr-jayalalithaa-project-interview-with-palanisamy-chief-minister-for-farmers-government

இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத்திட்டம். அம்மா அவர்கள் அதனை தொடர்ந்து நிறைவேற்றி வந்தார்கள். எங்களுடைய அரசும் விவசாயிகளுடைய நலன் காக்கும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில் இன்று (23.5.2020) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்புப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

31-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வுபடுத்தப்படுமா, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து?.

மத்திய அரசு என்ன அறிவிப்பு வெளியிடுகின்றது என்று பார்க்கலாம். மருத்துவக் குழுவை விரைவில் சந்திக்கவிருக்கிறோம். மருத்துவக் குழுவினரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது படிப்படியாக தளர்வு செய்து கொண்டிருக்கிறோம். வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் விதிமுறைகளுக்குட்பட்டு பாதி அளவிற்கு திறந்து பணிகள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், தொழிற்சாலைகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைகளை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிகளில் அமர்த்தக்கூடாது போன்ற வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அதனை பின்பற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். இவற்றையெல்லாம் பின்பற்றினால் நோய் பரவலை தடுக்க முடியும். அனைத்தையும் படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

கூட்டாட்சி முறையை கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தெரிவித்திருக்கிறதே. மத்திய அரசை பொறுத்தவரைக்கும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

எங்களைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அதிமுக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசுக்கு மத்தியில் துணை நிற்க வேண்டும், அதுதான் எங்களுடைய எண்ணம்.

டெல்டா மாவட்டத்திற்கான நிவாரண உதவிகள் குறித்து?

டெல்டா மாவட்டம் என்று எடுத்துக் கொண்டாலே தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் தான் வரும். அதில் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் இருக்கிறது. அதில் இருக்கின்ற மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்கின்றோம். அதாவது, சம்பா தொகுப்பு, குறுவை தொகுப்பு எல்லாம் தண்ணீர் திறந்துவிடாத போது கொடுப்பார்கள்.

ஏன் என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி அந்த வேளாண் பணியை மேற்கொள்வார்கள். பயிர் நடவு செய்வார்கள். அதற்காக குறுவை தொகுப்பு கொடுப்பார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடுகின்றோம். ஜூன் 12ஆம் தேதியே டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படும்.

கொரோனா பாதிப்பால் தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளில் இருக்கிறது. அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். ஆனால் தமிழக அரசிற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகைக்கூட மத்திய அரசு கொடுக்காமல் இருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த பணம் கூட தராமல் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே நெருக்கடியில் இருக்கிறது. வல்லரசு நாடுகளே நெருக்கடியில் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளும் நெருக்கடியில் இருக்கிறது. எல்லா பகுதிகளிலுமே இன்றைக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தன் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்தியாவும் ஸ்தம்பித்து இருக்கிறது, தமிழ்நாடும் ஸ்தம்பித்து போய் இருக்கிறது.

ஆகவே, நமக்கு கிடைக்கவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அது எல்லாம் வந்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களும், மார்ச் மாத்தில் 7 நாட்களும், இந்த காலக்கட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துவிட்டது.

சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை சொல்லியிருக்கிறது. அதை சரிகட்டுவதற்காக அரசு பல்வேறு வகையில் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நடவடிக்கைகளை நாங்கள் அறிவிப்பில் கொடுத்திருக்கிறோம். ஆகவே, அரசாங்கம் பல்வேறு வகையில் இழப்பீட்டை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதேநேரத்தில், வளர்ச்சி பணிகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்தில் இருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் எதுவும் குறையாமல் இருந்தால் தான் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வளர்ச்சிப் பணிகள் இல்லையென்றால் வேலைவாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்பு இருந்தால் தானே மக்களின் கையில் பணப்புழக்கம் இருக்கும்.

அதனால் அந்தப் பணியையும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எந்தவிதத்திலும் வளர்ச்சிப் பணிகளில் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். அதேபோல இழப்பீட்டை எப்படி சரி செய்வது என்பதை கவனத்திலே கொண்டு அவற்றையும் சரி செய்து கொண்டிருக்கிறோம்.

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது?

நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறேன். பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்தேன். எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது, ஊடகத்திலும் வந்திருக்கிறது. இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத்திட்டம். அம்மா அவர்கள் அதனை தொடர்ந்து நிறைவேற்றி வந்தார்கள். எங்களுடைய அரசும் விவசாயிகளுடைய நலன் காக்கும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும்.

கல்வியாண்டு துவங்க இருக்கின்றதே?

கல்வியாண்டு துவங்கவில்லை. ஜூன் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும். இந்தியாவில் 15 மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்து, தேர்வுதாள் திருத்தும் பணி நிறைவு பெற்று விட்டது. ஆகவே நம்முடைய மாநிலத்திலே படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இன்றைக்கு பல்வேறு கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 1-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

மக்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூன் 15-ஆம் தேதிக்கு தேர்வினை பள்ளிக் கல்வித் துறை தள்ளி வைத்துள்ளது. அந்த தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அந்த தேர்வு நடைபெறும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Free Electricity MGRJayalalithaaProjectInterview with PalanisamyChief MinisterFarmers Governmentஇலவச மின்சாரம்எம்ஜிஆர்ஜெயலலிதாதிட்டம்விவசாயிகளுக்கு அரசு துணை நிற்கும்முதல்வர் பழனிசாமிபேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

barack-obama

ஒபாமா ஓய்வதில்லை

கருத்துப் பேழை