Published : 14 May 2020 07:13 AM
Last Updated : 14 May 2020 07:13 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட 9 கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு பிறகு குணமடைந்தனர்: குழந்தைகளுடன் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

சென்னை கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 9 கர்ப்பிணிகள், பிரசவத்துக்குப்பின் குணமடைந்து குழந்தைகளுடன் வீடு திரும்பினர்.

நாடு முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துதரப்பினரும் கரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 9 கர்ப்பிணிகள் பிரசவத்துக்குப் பின்னர் குணமடைந்து குழந்தைகளுடன் நேற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) கே.கண்மணி ஆகியோர் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கே.கண்மணி கூறியதாவது:

இந்த மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் 25 கர்ப்பிணிகள் இருந்தனர். 12 பேருக்கு பிரசவம் நடந்தது. இதில், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 9 பேர் குழந்தைகளுடன் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். முதலில் எடுத்த பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கு வைரஸ்தொற்று இருப்பதாகத் தெரிந்தது.பின்னர், எடுக்கப்பட்ட மறுபரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

குழந்தைபேறுக்குப் பின்னர் 2வாரம் தனிமைப்படுத்தி சிகிச்சைஅளித்தோம். மருந்து, மாத்திரைகளுடன், சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டன. தாய், சேய் இருவரையும் பிரித்து வைத்திருந்தோம். பால்கொடுக்கும்போது மட்டும் குழந்தைதாயிடம் இருந்தது. 2 வார சிகிச்சைக்குபின்னர் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால், 9 பேரும் குழந்தைகளுடன் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் இதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x