Published : 06 Aug 2015 07:37 AM
Last Updated : 06 Aug 2015 07:37 AM

சிவாஜிகணேசன் சிலை விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலைக்கு எதிரே உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை இடமாற்றம் செய்யக்கோரும் வழக்கில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவாஜிகணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவாஜிகணேசன் சிலை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு, சிவாஜிகணேசன் சிலையை அகற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படாததால் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்குப் பதில் மனுதாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x