Last Updated : 05 Aug, 2015 09:01 AM

 

Published : 05 Aug 2015 09:01 AM
Last Updated : 05 Aug 2015 09:01 AM

தீவிரமடையும் மதுவிலக்குப் போராட்டங்கள்: ‘பெர்மிட்’ முறை இருந்தபோது தமிழகம் எப்படி இருந்தது? - ஓய்வுபெற்ற அரசு ஊழியர், மருத்துவர், மூத்த குடிமகன் கருத்து

முன்னெப்போதையும்விட, மது விலக்குக் கோரிக்கை தற்போது உச்சத்தில் இருக்கிறது. சீக்கிரமே படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படலாம் என்றும், பழையபடி பெர்மிட் முறை அமல்படுத்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அது என்ன பெர்மிட் முறை? அந்தக் கால பெரியவர்களிடம் கேட்கலாம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் அகோரம்:

அலோபதி மருத்துவத்தில் சிலரது உடல்நிலையைப் பொறுத்து அவர்களுக்கு ஆல்கஹாலை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதுபோன்றவர்களுக்கு மது வழங்குவதற்காக, பெர்மிட் முறை நடைமுறையில் இருந்தது. அதாவது மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற்று, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்துறையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அனுமதிக் கடிதம் (பெர்மிட்) பெற வேண்டும்.

பெர்மிட்டில் மது வாங்குபவர்கள் வீடு அல்லது அனுமதி பெற்ற கிளப்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் இந்த பெர்மிட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று விதியிருந்தது.

எஸ்.காந்தி:

அப்போதெல்லாம் ஒருவருக்கு மது வேண்டும் என்றால், அரசிடம் முறைப்படி விண்ணப்பித்து பெர்மிட் பெற வேண்டும். ஆனால், அப்படிச் செய்வதற்கு கூச்சப்படுவார்கள். மாதம் 4 யூனிட் (ஃபுல்) மது பெற்றுக் கொள்ளலாம்.

அருகில் உள்ள கூட்டுறவு கடைக்குச் சென்று அந்த பெர்மிட்டையும், ரேஷன் கார்டையும் காண்பித்து, வாரம் ஒரு பாட்டில் வீதம் பெற்றுக்கொள்ளலாம். கொஞ்ச காலத்தில், ஒரு மாதத்துக்கான மதுவை ஒரே நாளில் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று விதியை தளர்த்தினார்கள்.

பெரிய மனிதர்களும், பணக்காரர்களும் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமான மதுபானத்தை வாங்கி பதுக்குவதையும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் பெர்மிட்டில் மதுவை வாங்கி பிளாக்கில் விற்பதையும் பார்த்திருக்கிறேன்.

இப்போதையே சூழலில் மதுக்கடைகளை முழுமையாக மூட முடியாவிட்டாலும் கூட, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். பழைய படி ஊருக்கு ஒதுக்குப்புறமாக, மதுக்கடைகளை மாற்ற வேண்டும்.

ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன்:

மருத்துவர் களிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த தற்கு மூன்று காரணங்கள். அப்போது 18 வயதுக்கு குறைவானவர்கள் மது அருந்த தடை இருந்தது. வயதை சரிபார்ப்பது, மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு, அல்சர் போன்றவை இல்லை என்பதை உறுதிப்படுத்துவது, சான்றிதழ் பெறச் சென்றால் மருத்துவர் கண்டிப்பாரே, வீட்டுக்குத் தெரிந்துவிடுமே என்ற தயக்கத்தை ஏற்படுத்துவது.

பெர்மிட் முறை போய், வீதி தோறும் கடை வந்த பிறகுதான் மது அடிமைகள் அதிகமாகி இருக்கிறார்கள். இப்போது மதுபானங்கள் மிக எளிதாக கிடைக்கிறது, பல்வேறு ரகங்களில் கிடைக்கிறது, மூன்றாவதாக அது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிகமிக குறைவாக இருக்கிறது.

மதுவை ஒழிப்பது கடினம். மதுப் பழக்கத்தை ஒழிப்பதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x