Published : 14 Feb 2020 01:38 PM
Last Updated : 14 Feb 2020 01:38 PM

தமிழக பட்ஜெட் 2020: நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி ஒதுக்கீடு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

நீதி நிர்வாகத்திற்கு 2020-2021 பட்ஜெட்டில் 1,403.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், நீதித்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"சிறந்த நீதி நிர்வாகத்திற்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 494 புதிய நீதிமன்றங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,317.04 கோடி ரூபாய் செலவில் நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உட்பட பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2020-201 பட்ஜெட்டில் புதிய கட்டிடங்களின் கட்டுமானத்திற்காக 12.92 கோடி ரூபாய் உள்பட நீதி நிர்வாகத்திற்கென 1,403.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். இதில் பட்டியலிடப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே திட்டப் பட்டியலை தயார் செய்து வைத்திருந்ததால், சமீபத்தில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்திற்கு பயனளிக்கும் பல திட்டங்களை அதில் சேர்ப்பதற்கு உடனடியாக தெரிவிக்க முடிந்தது.

அதன்படி தமிழ்நாட்டின் 8.53 லட்சம் கோடி ரூபாய் மொத்த செலவிலான, 173 திட்டங்கள், மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்திட்டங்கள் முழுமை பெறுவதற்கு உதவியளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்"

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x