

தமிழக அரசு பட்ஜெட்டில் மகளிருக்கான திட்டங்களுக்காக ரூ.1,662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கான அம்மா மானிய விலை இருசக்கர வாகனத் திட்டம் குறித்து அறிவித்தார். பின்னர் அது நடைமுறைக்கு வந்தது. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி என மொத்தம் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ரூ.1662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கான ஒதுக்கீடு சமூக நலத்துறையின் கீழ் வரும்.
பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.