Published : 14 Feb 2020 01:17 PM
Last Updated : 14 Feb 2020 01:17 PM

தமிழக பட்ஜெட் 2020: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு

அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

''பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மொத்தம் உள்ள 30 ஆயிரம் பணிகளில் 21 ஆயிரத்து 444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். 2020-2021-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக, நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப்படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.

கட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திடத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 20230-ல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-2015 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை 2,241.19 கோடி மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை உருவாக்குதல் புதிய அணைக்கட்டுகளை கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்களை அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில் 261 பணிகள் நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 பட்ஜெட்டில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-2021 பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x