

ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள 6 தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கையில், "ஜப்பான் கடலில் தத்தளிக்கும் கப்பலில் உள்ள தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது கப்பலில் உள்ளவர்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கப்பலில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,700 பயணிகளும், சுமார் 1,000 ஊழியர்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பலில் பயணம் செய்தவர்களில் முதலில் ஒரு ஹாங்காங் பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் இருந்ததால் அந்தக் கப்பல் ஜப்பான் அருகே உள்ள நடுக்கடலில் 15 நாட்களுக்கும் மேலாக தத்தளித்து வருகிறது.
குறிப்பாக, கப்பலில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றானது தொடர்ந்து பரவியதால் தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நோய்த்தொற்று பரவினால் கப்பலில் உள்ள மற்ற பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்திலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரை மீட்க அவரது குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
எனவே, கப்பலில் உள்ள இந்தியர்கள் எவரும் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கப்பலில் சிக்கியுள்ள 6 தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தவறவிடாதீர்!