

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் உள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் நேற்றுஅனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜப்பானின் 'டைமண்ட் பிரின்சஸ் 'என்ற பயணிகள் கப்பல் கடந்த 9 நாட்களாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள 3,500-க்கும் அதிகமான பயணிகளில் 60 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள்யாரும் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் இந்தக் கப்பலில் பணியாற்றி வருகிறார். அவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய தகவலில், ‘டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தமிழகத்தைச்சேர்ந்த 6 பேர் உட்பட 100 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 100 பேரையும் கப்பலில் இருந்து விடுவிக்க இந்திய அரசு உதவ வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜப்பான் கப்பலில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய பணியாளர்களை பாதுகாப்பாக அழைத்துவர வெளியுறவுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.