Published : 13 Feb 2020 09:30 AM
Last Updated : 13 Feb 2020 09:30 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: வெறும் கானல் நீரா? - வைகோ கேள்வி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு வெறும் கானல் நீரா என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசு, 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த எட்டு ஆண்டு காலமாக மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இத்தகைய நாசகாரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் சோழ மண்டலத்தைப் பாதுகாக்க காவிரிப் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் இடையறாது போராடி வருகின்றனர்.

மக்கள் போராட்டங்களுக்கு அணு அளவும் மதிப்பளிக்காத பாஜக அரசு, 2018 அக்டோபர் 1 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது.

மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 5,099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மொத்தம் 324 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, 13 அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்ததற்குக் காரணமான வேதாந்தா குழுமம் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்காகவே சுற்றுச்சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புத் தேவை இல்லை என்று எதேச்சதிகாரமாக பாஜக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

இதுமட்டும் இல்லாமல், காவிரிப் படுகை பகுதியான கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு 2017 ஜூலை 19 இல் குறிப்பாணை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்து இருப்பது கானல் நீராகிப் போய்விடுமோ? என்ற கவலை எழுகிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு என்ன கதி நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

காவிரி தீரத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முழுமையாகச் செயல்படுத்த வேண்டுமானால், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ரத்து செய்யத் தயாரா?

இந்தக் கேள்விக்கு விடை காணத்தான் பிப்ரவரி 11 ஆம் தேதி மாநிலங்களவையில் ஹைட்ரோகார்பன் பிரச்சினையை எழுப்ப முயன்றேன். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புன்னகை பூக்க அமர்ந்திருந்தார். அமைச்சரின் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர முடியாதவர்கள் அல்லர்.

எனவேதான் பாஜக அரசைக் கண்டித்துவிட்டு அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தேன்.

காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் திகழ வேண்டுமானால் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

காவிரிப் படுகையில், பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த குறிப்பாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x