Published : 10 Feb 2020 06:31 PM
Last Updated : 10 Feb 2020 06:31 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இறந்துவிட்டதாகக் கூறிய முக்கிய சாட்சி ஆஜரானதால் பரபரப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சாட்சி இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவர் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சாட்சிகளிடம் விசாரணை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. 2-ம் சாட்சி பஞ்சம் விஸ்வகர்மா மற்றும் 3-ம் சாட்சி சுனில் தாபா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்.

முக்கிய சாட்சி ஆஜரானதால் பரபரப்பு

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ஆனந்த், முதல் மற்றும் முக்கிய சாட்சியான கிருஷ்ணா தாபா இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு மற்றும் மூன்றாம் சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவை நேபாளத்திலிருந்து வரவழைத்து இன்று போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் விசாரணை நடத்தினார்.

கிருஷ்ண தாபா, கொலை நடந்த அன்று நடந்த சம்பவங்களைச் கூறினார். மேலும், அன்று அவர் அணிந்திருந்த ஆடைகள், தனது செல்போன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னைத் தாக்கி, கை, கால்களைக் கட்டிய கயிறு ஆகியவற்றை அடையாளம் காட்டினார். கிருஷ்ண தாபா இந்தியில் கூறியதை, நீதிபதியிடம் மொழிபெயர்ப்பாளர் தமிழில் கூறினார்.

சாட்சி கிருஷ்ண தாபாவின் வாக்குமூலத்தை நீதிபதி பி.வடமலை பதிவு செய்தார். பின்னர் மாலையில் நடைபெற்ற சாட்சி விசாரணையில் முக்கிய சாட்சி கிருஷ்ண தாபா, சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, உதயன் ஆகிய 5 குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தார்.

அதன்பிறகு நாலாவது சாட்சியான ஓட்டுநர் யோகநாதனிடம் அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் விசாரணை நடத்தினர். அவர் காயமடைந்த கிருஷ்ணா தாபாவை கோத்தகிரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தது குறித்து சாட்சியமளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி வடமலை, கோடநாடு கொலை வழக்கு சாட்சி விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

103 சாட்சிகள்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மொத்தம் 103 சாட்சிகளை போலீஸார் சேர்த்துள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னரே கடந்த மாதம் தான் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதுவரை 4 சாட்சிகளிடமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 99 சாட்சிகள் விசாரிக்க வேண்டிய நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை தொடங்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் கூறும் போது, ‘சயான் மற்றும் வளையாறு மனோஜுக்கு ஜாமீன் வழங்கக் கோரிய மனுவை மாவட்ட நீதிபதி நிராகரித்து விட்டதால், உயர் நீதிமன்றத்தில் அந்த மனு முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான தீர்ப்புக்கு பின்னரே குறுக்கு விசாரணை தொடங்கும்’என்றார்.

இதனால், இந்த வழக்கு விசாரணை முடிந்து, எப்போது தீர்ப்பளிக்கப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தவறவிடாதீர்!

காவிரி டெல்டா: பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாறுமா?

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: திருமாவளவன் வலியுறுத்தல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x